சென்னை அயனாவரம் பொண்ணு வேல்புரம் 3 ஆவது தெருவை சேர்ந்த  சீனிவாசன்-செல்வி தம்பதியினர். இவர்கள் இருவரும் கொத்தனார் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு பெண் மற்றும் ஒரு மகன் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். இவர்களின்
  இரண்டாவது மகளான  ஷாலினி (19),  ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் செல்போன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். 

 

ஷாலினிக்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் பேசி முடிவாகி விரைவில் நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் ஷாலினி சென்னை மின்ட் பகுதியைச் சேர்ந்த  ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தனது காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதிக்காததால் மனமுடைந்த ஷாலினி தனது பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்றவுடன் வீட்டில் யாரும் இல்லாத போது புடவையால் தனக்குத் தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  மாலையில் பெற்றோர்கள் வீட்டுக்கு வந்து பார்த்த போது ஷாலினி பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து அக்கம் பக்கத்தினர் அயனாவரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற அயனாவரம் போலீசார் ஷாலினி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.