முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. விழாவில் பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளாக இருந்த, பாலாற்றில் தடுப்பணை, பேருந்து நிலையம் மற்றும் மீன்பிடி துறைமுகம் ஆகிய அறிவிப்புகளை வெளியிட்டார். திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகி 4 ஆண்டுகள் கடந்த நிலையில், மீன்பிடி துறைமுகத்திற்கான எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படாமல் இருக்கிறது.
கிழக்கு கடற்கரை சாலையில், விழுப்புர மற்றும் செங்கல்பட்டு மாவட்ட எல்லையில், ஆலம்பரகுப்பம் பகுதியில் உள்ள, பக்கிங்ஹாம் கால்வாய் அருகே மீன்பிடி துறைமுகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு மீன்பிடி துறைமுகம் அமைந்தால், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்ட மீனவர்கள் தங்களின் விசை படகுகளை நிறுத்திக் கொள்ளமுடியும். தற்பொழுது விசைப்படகு வைத்திருக்கும் அப்பகுதி மீனவர்கள், தங்களின் பெரிய படகுகளை நிறுத்த போதிய இடமில்லாத காரணத்தால், சென்னை ராயபுரம் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்துகின்றனர். அதேபோல் விழுப்புரம் மாவட்ட மீனவர்கள் புதுச்சேரி அருகே காரைக்காலில் தங்களின் படகுகளை நிறுத்துகின்றனர்.
ஆலம்பரகுப்பம் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைந்தால், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்ட மீனவர்கள், தங்களின் விசைப்படகுகளை இங்கு நிறுத்த ஏதுவாக இருக்கும். இதனால், மீனவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும். மீன்பிடி துறைமுகம் அமைக்க, முதற்கட்டமாக, 251 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியது, இருந்தும் இதுவரை எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டை வைத்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது, 19 விசைப்படகுகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், 2,000 க்கும் மேற்ப்பட்ட பைபர் படகுகள் பயன்பாட்டில் இருப்பதாகவும், மாவட்டம் முழுவதும், 16 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடி தொழிலில் இருப்பதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இதற்கு சமமான எண்ணிக்கையில் படகுகள் இருக்கும் என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆலம்பரகுப்பம் பகுதியில், மீன்பிடி துறைமுகம் துவங்கப்பட்டால், பைபர் படகுகளை பயன்படுத்தும் மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காக விசைப்படகுகளுக்கு மாறி, தொழிலை மேம்படுத்திக் கொள்வர். அதேபோல மீன்பிடித் துறைமுகம் அமைந்தால் அந்த இடத்தில் ஏலக்கூடம் மீன் விற்பனை ஆகியவை அதிகரிக்கும் இதன் காரணமாக உள்ளூர் மக்கள் பலருக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு வாய்ப்புள்ளது. அதேபோல மீன் பிடிப்பதற்கான வலை பின்னல் கூடங்களும் மீன்களை பதப்படும் நிலையம் ஆகியவை அமைக்கப்படும், இதன் காரணமாக மேலும் சுற்றியுள்ள பல கிராம மீனவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மீன் பிடி துறைமுகம் அமைப்பதற்கான பணிகள் எதுவும் துவங்காததால், அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம், தொடர்ந்து நலிவுற்றுள்ளது. முன்னாள் முதல்வரின் அறிவிப்பை இப்பொழுது புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு செயல்படுத்த வேண்டும் என்பதே மீனவ கிராம மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதுகுறித்து அப்பகுதி மீனவர் குப்புராஜ் கூறுகையில், மீனவர் துறைமுகம் இல்லாத காரணத்தினால், புயலில் சிக்கி படகுகள் சேதம் அடைவது மட்டுமில்லாமல் உயிர் சேதமும் ஏற்படுகிறது. அதேபோல் துறைமுகத்தில் படகு நிறுத்தினால் படகின் ஆயுட்காலமும் நீடிக்கும், விசைப்படகு வைத்திருக்கும் மீனவர்கள் வீணாக புதுச்சேரி, ராயபுரம் ஆகிய பகுதிகளுக்கு அலையாமல் சொந்த ஊரிலே தொழில் பார்ப்பார்கள். எனவே அரசு உடனடியாக அதற்கான பணிகளை துவங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, அதற்கான தனி பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், விரைவில் துறைமுகம் அமைப்பதற்கான அனைத்து வித ஏற்பாடுகளும் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.