ரெட் அலர்ட்


இன்றைக்கு, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அதிகனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், பள்ளி, கல்லூரிகள் மற்றும் சில அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மக்களும் முன்னெச்சரிக்கையாக உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வைத்தனர். 


ஏன் அதிகனமழை இல்லை:


ஆனால், எதிர்பார்த்த அதிகனமழை பெய்யவில்லை, மாறாக சில நேரங்களில் மிதமான மழை பெய்கிறது, சில நேரங்களில் வெயில் கூட அடித்தது. 


இந்நிலையில், இதுகுறித்து தனியார் வானிலை நிபுணர் தெரிவிக்கையில், “ கனமழையை கொடுக்க கூடிய மேககூட்டங்கள் மேல்நோக்கியும், தெற்கு ஆந்திராவை நோக்கியும் சென்றுவிட்டன. இதன் காரணமாக  ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யவில்லை. 


வானிலை மைய இயக்குநர் பிற்பகல் அப்டேட்:


ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது குறித்தும், வானிலை நிலவரம் குறித்தும் வானிலை மையம் இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளதாவது “ காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா என்பது குறித்து இப்போது கணிக்க முடியாது . 


மேலும், சென்னையில் நேற்று இரவு மழை மேகங்கள் உருவாகுவதற்கான சூழல் இல்லாத காரணத்தால் மழை மேகங்கள் உருவாகவில்லை. இதே சூழ்நிலைதான் இன்று காலையும் இருந்தது. இதனால், அதிகனமழை தரக்கூடிய மழைமேகங்கள்  உருவாகவில்லை, இதனால் இன்று அதிகனமழை பெய்யவில்லை.


ஏற்கனவே பெய்த மழை அளவு, காற்றின் வேகத்தை பொறுத்து ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் சூழலால் சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கரையை இன்னும் கடக்காத காரணத்தால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.






காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே? 


வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, கடந்த 6 மணி நேரத்தில் 15 கி.மீ வேகத்தில்  நகர்ந்து வருகிறது. சென்னைக்கு 280 கி.மீ கிழக்கு – தென்கிழக்கிலும், புதுச்சேரிக்கு 320 கி.மீ கிழக்கு வடக்கிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நிலை கொண்டுள்ளது. 


இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், மேற்கு - வட மேற்கு நோக்கி நகர்ந்து வடதமிழ்நாடு தெற்கு ஆந்திர கடற்கரையோரம் மற்றும் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே நாளை (அக்டோபர். 17) காலை கரையை கடக்க கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



இந்நிலையில், நாளை காலை கரையை கடக்கவுள்ள நிலையில், அந்த நேரத்தில் காலை மிதமான மழை முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


ஆகையால், மழை தற்போது இல்லையென்று நினைக்க வேண்டாம், காற்றழுத்தம் கரையை கடக்கும் வரை முன்னெச்சரிக்கையுடன் கவனமாக இருங்கள்.