அனைவரும் பயன்படுத்தும் செயலி

Continues below advertisement

வாட்ஸ் அப் செயலி தற்போது உலக அளவில் அதிகம் பேர் பயன்படுத்தும் சமூக வலைத் தளங்களில் ஒன்றாக உள்ளது. ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் கண்டிப்பாக பயன்படுத்தும் ஒரு செயலியாக உள்ள வாட்ஸ் அப், பயனர்களை கவர புதுப் புதுப் அப்டேட்களை வெளியிட்டு வருகிறது.

துவக்கத்தில் குறுஞ் செய்தி மட்டுமே அனுப்பும் தளமாக இருந்த வாட்ஸ் அப் செயலி, பின்னர் பல்வேறு அப்டேட்களை கொடுத்தது. வாட்ஸ் அப்பில் ஆடியோ, வீடியோ கால் வசதி, பாடல்களை ஸ்டேடஸ் ஆக வைக்கும் வசதி என வாட்ஸ் அப் சமீபத்திய ஆண்டுகளில் கொண்டு வந்த அப்டேட்களை சொல்லிக் கொண்டே போகலாம். வாட்ஸ் அப் சந்தையில் தனக்கு உள்ள போட்டியை சமாளிக்கவும், வாடிக்கையாளர்களை கவரவும் தொடர்ச்சியாக இத்தகைய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. 

Continues below advertisement

Device Link வசதி - எச்சரிக்கை கொடுக்கும் சைபர் பாதுகாப்பு முகமை

வாட்ஸாப் செயலியின் டிவைஸ் லிங்கிங் எனப்படும் கணினியில் பயன்படுத்தும் பதிப்பில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது. இதன் மூலம் ஒருவரின், வாட்ஸாப் கணக்கின் முழு கட்டுப்பாட்டையும் இணைய குற்றவாளிகள் தங்கள் வசம் கொண்டு வர முடியும் என மத்திய சைபர் பாதுகாப்பு முகமை எச்சரித்துள்ளது.

இது குறித்து சைபர் பாதுகாப்பு முகமை வெளியிட்ட அறிக்கை ;

வாட்ஸாப் செயலியை கணினியில் பயன்படுத்தும் அம்சத்தில் தொழில்நுட்ப குறைபாடு உள்ளது. இதன் மூலம் பாஸ்வேர்டு மற்றும் சிம் கார்டு இல்லாமல், ஒருவரின் வாட்ஸாப் கணக்கை சைபர் குற்றவாளிகளால் எளிதில் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும்.

இதன் மூலம் வாட்ஸாப்புக்கு வரும் நிகழ்நேர குறுஞ்செய்திகள், படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை இணைய பதிப்பு வழியாக அவர்களால் எளிதில் பார்க்க முடியும்.

ஒரு புகைப்பட இணைப்பை அனுப்பி, இந்த இணைய தாக்குதலை செய்கின்றனர். நம்பகமான நபரின் எண்ணில் இருந்து இணையதள இணைப்பு ஒன்று அனுப்பப்படுகிறது. அதில், இந்த புகைப்படத்தை பார்க்கவும் என குறிப்பிடப்பட்டிருக்கும்.

பார்ப்பதற்கு, 'பேஸ்புக் ப்ரீவியூ' அம்சத்தில் இருக்கும். அந்த போலியான பேஸ்புக் இணைப்பை திறந்ததும் படத்தை காண மொபைல் போன் எண்ணை உள்ளிட்டு உறுதிப்படுத்தவும் என்ற செய்தி தோன்றும். அதில் மொபைல் போன் எண்ணை உள்ளிட்டால், அடுத்த நிமிடம் வாட்ஸாப்பின் கட்டுப்பாடு சைபர் தாக்குதல் குற்றவாளிகள் வசம் சென்றுவிடும்.

இது, 'கோஸ்ட் பேரிங்' தாக்குதல் எனப்படுகிறது. இதன் மூலம் சைபர் குற்றவாளிகளால் பயனரின் வாட்ஸாப்பில் உள்ள அனைத்து தனிநபர் விபரங்களையும் பார்க்க முடியும்.

எனவே தெரிந்த நபரின் எண்ணில் இருந்து சந்தேகப்படும்படியான இணைய இணைப்புகள் வந்தாலும் அதில் மொபைல் எண்ணை உள்ளிட வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இது குறித்து வாட்ஸாப் நிறுவனம் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.