பஞ்சாபில் தாக்கப்பட்ட தமிழக கபடி வீரர்கள்

Continues below advertisement

பஞ்சாபில் அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டியில் விளையாட சென்ற நிலையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனைகள் டெல்லியில் இருந்து தமிழகம் திரும்பினார்கள். அவர்கள் எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

பழனி ஆண்டவர் கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் கலையரசி பேட்டி 

Continues below advertisement

டெல்லியில் இருந்து பாதுகாப்பாக சென்னை வந்தடைந்து விட்டோம். அறநிலைத்துறை அலுவலர்கள் , மாவட்ட விளையாட்டு அலுவலர் , தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு வாரிய அலுவலர்கள் எங்களை வரவேற்றனர்.

அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கபடி போட்டிக்குத் தமிழகத்திலிருந்து நான்கு பல்கலைக் கழகங்கள் தேர்வாகியிருந்தோம். அழகப்பா, பெரியார், மதர் தெரசா, பாரதியார் பல்கலைக்கழக அணிகள் தேர்வாகியிருந்தது. பெரியார் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகங்கள் விளையாடிய போட்டி ஒரு தலைப்பட்சமாக இருந்ததால் அவர்கள் வெளியேறி விட்டார்கள். 

மதர் தெரசா மகளிர் பல்கலைக்கழகம் மட்டும் காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. காலிறுதிப் போட்டி முடிவதற்கு ஐந்து நிமிடங்கள் இருந்தபோது , நமது வீராங்கனை ரெய்டு சென்றிருந்தார். அப்பொழுது எதிர் தரப்பு வீராங்கனைகள் அவரைத் தாக்க முயற்சி செய்தார்கள். நமது வீராங்கனை தற்காப்பிற்காக செயல்படப்போன போது அவர்கள் அனைவரும் சேர்ந்து தாக்கினார்கள். அதனால் ஐந்து நிமிடம் அங்கு கைகலப்பு ஏற்பட்டது.

தமிழக துணை முதலமைச்சரின் போன் கால்

விரைவாக அமைச்சர்கள் அனைவரும் துணை முதல்வருக்கு இந்தத் தகவலை கொண்டு சென்றார்கள். நாங்கள் பாதுகாப்பின்மையாக உணர்ந்த போது தமிழக துணை முதல்வரிடம் இருந்து அழைப்பு வந்தது. அதற்குப் பிறகு அங்கிருந்து காவல் துறை அதிகாரிகள் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க ஆரம்பித்தார்கள். தமிழக கபடி வீராங்கனைகளுக்காக துணை முதலமைச்சர் அழைத்து பேசியது, பாதுகாப்பாக வீராங்கனைகளை அழைத்து வந்துவிட முடியும் நம்பிக்கையை அளித்தது.

அங்கிருந்து கிளம்பி டெல்லி சென்றடைந்தோம், அங்கு தமிழ்நாடு மாளிகையில் எங்களுக்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது. 

கடந்த முறையும் அகில இந்திய கபடி போட்டியை பஞ்சாப் குருகாசி பல்கலைக்கழகம் தான் நடத்தினார்கள். இந்த முறையும் அவர்கள் தான் நடத்தினார்கள். ஒருவருக்கே ஏன் நடத்துவதற்கான அனுமதியை கொடுக்க வேண்டும். 

வடக்கு மாநிலங்களுக்கே இந்த போட்டிகளில் நடத்துவதற்கான அனுமதியை கொடுக்காமல், தென் மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கும் கொடுக்கலாம்.

வட மாநிலங்களில் சென்று விளையாடும் போது கால நிலை, உணவு, இருப்பிடம் என அனைத்தும் கடினமாக உள்ளதால் போட்டியில் ஒரு தலைப்பட்சமாக இருப்பதாகக் கூறினார். முறையாக புள்ளிகளை அவர்கள் தரவில்லை.

ஐந்து நிமிடம் பதட்டமான சூழ்நிலை நிலவியது. தமிழக அரசின் சரியான நடவடிக்கையால் அனைத்தும் சீராகிவிட்டது என்று கூறினார்.  வீராங்கனைகள் அனைவரும் தற்போது பாதுகாப்பாக உணர்வதாகவும் கூறினார்.

வீராங்கனை ஜெயஶ்ரீ பேட்டி

மதர் தெரசா பல்கலைக்கழகத்திற்காக அகில இந்திய போட்டியில் விளையாடினேன். தர்பாங்க பல்கலைக்கழக அணியுடன் எங்களுக்கு கால் இறுதிப் போட்டி நடைபெற்றது. இப்பொழுது நான் ரேட் சென்றிருந்த போது அவர்கள் என்னை தாக்கினார்கள். நானும் என்னுடைய தற்காப்பிற்காக அவர்களை தாக்கினேன். பயிற்சியாளர்கள் எல்லாம் அதை தடுக்க தான் வந்தார்கள் , ஆனால் அது அடித்தது போன்று மாறிவிட்டது. அங்கிருந்த அதிகாரிகளும் எதுவும் செய்யவில்லை , எங்களை அடிக்கத் தொடங்கி விட்டார்கள்.

எங்களது பயிற்சியாளர் பாண்டியை இரண்டு கைகளையும் பிடித்து அழைத்துச் சென்று அடித்தார்கள்.

பிரச்சனை நடந்த பிறகு அங்கிருந்து இங்குள்ள பயிற்சியாளர் மூலம் அமைச்சர்களுக்குத் தகவல்களை தெரிவித்தோம். தொடர்ந்து அமைச்சர்கள் துணை முதலமைச்சர் தகவல் தெரிவித்தார்கள். அதன் பிறகு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. 

எங்களது பயிற்சியாளரைக் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விட்டார்கள். துணை முதலமைச்சர் பேசிய பிறகு அவரை விடுவித்தார்கள்.

தமிழக அரசு எங்களுக்கு உதவிகரமாக இருந்தது. அங்கிருந்து தமிழகத்திற்கு திரும்பினால் போதும் என்று இருந்தது. எங்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்கள்.

அவர்கள் மன்னிப்பு கடிதம் எழுதித் தரக்கூறினார்கள். ஆனால் துணை முதலமைச்சர் பேசிய பிறகு அவை எதுவும் கேட்கப்படவில்லை.