கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக தமிழ்நாடில் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு சில தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான காய்கறிகள், பழங்கள், முட்டை, ரொட்டி, மற்றும் மளிகை பொருட்கள் ஆகியவை வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கே நேரில் சென்றுவிநியோகிக்க பெருநகர சென்னை மாநகராட்சி விற்பனையாளர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளது. இதுவரை மளிகை பொருட்களை விற்பனை செய்ய 4122 சில்லரை வணிகர்களுக்கும் 655 சூப்பர் மார்கெட் அங்காடிகளுக்கும் 457 மொத்த வியாபாரிகளுக்கும் என மொத்தமாக 5234 வணிகர்களுக்கு வாகன போக்குவதத்திற்கான பதாகைகள், வாகன அனுமதி ஆகியவை வழங்கப்பட்டுள்ளது.



விற்பனையாளர்கள் அனைத்துப்பகுதிகளுக்கும் சென்று விற்பனை மேற்கொள்ளவும், வாகனங்கள் மற்றும் தள்ளுவண்டிகளில் தினசரி விற்பனை செய்யும்போது ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து காய்கறி, பழங்கள், ரொட்டி, முட்டை ஆகியவற்றை விற்பனை செய்யவும், பொருட்களின் விலைப்பட்டியலை வாகனத்தில் பொதுமக்களுக்கு தெரியும் வகையில் ஒட்டிவைக்கவும் வியாபரிகளுக்கு மாநகராட்சியால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் உத்தேச சில்லரை விற்பனையைவிட அதிக  விலையில் விற்பனை செய்ய வேண்டாம் எனவும், அவ்வாறு விற்பனை செய்தால் மாநகராட்சியால் வழங்கப்பட்ட அனுமதி ரத்து செய்யப்பட்டு வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட பதாகைகள், வாகன அனுமதி ஆகியவை பறிமுதல் செய்வதுடன் விற்பனை மேற்கொள்வது தடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.


இந்த நிலையில் பெருநகர் சென்னை மாநகராட்சியால் மாதவரம், ஆலந்தூர், சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் உத்தேச சில்லறை விற்பனை விலையைவிட அதிகவிலைக்கு விற்பனை மேற்கொண்ட 4 வியாபாரிகளிடம் இருந்து பதாகைகள்,  வாகன அனுமதி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு அவர்கள் தொடர்ந்து வியாபாரம் செய்வதற்கும் மாநகராட்சியால் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் காய்கனிகள் விலை பட்டியல் மற்றும் இதர புகார்கள் தொடர்பாக சென்னை மாநகராட்சி தலைமையிடத்து கட்டுப்பாட்டு அறையில் உள்ள 94999 32899 என்ற கைபேசி எண் மற்றும் 5 இணைப்புகளுடன் கூடிய 044-4568 0200 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இதுவரை இந்த கட்டுபாட்டு அறை எண்களில் இருந்து 1139 புகார்கள் பெறப்பட்டு அதன்மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டுவரும் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் அறிவுறுத்தலின்படி, பொதுமக்களின் நலன் கருதி அத்தியாவசியப் பொருட்களை பொதுமக்களுக்கு தங்குதடையின்றி கிடைக்கவும் நியாமான விலையில் விநியோகம் செய்வதை உறுதி செய்யவும் வியாபாரிகள் பெருநகர சென்னை மாநகராட்சியுடன் ஒத்துழைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககந்தீப் சிங் பேடி பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இனி உங்கள் பகுதியில் யாராவது கூடுதல் விலைக்கு காய்கறிகள் விற்பனை செய்தால் மேலே குறிப்பிட்டுள்ள எண்களுக்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.