கடந்த மாதம் நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட்டு பல இடங்களில் குறிப்பிடத்தக்க வெற்றியினை பதிவு செய்திருந்தது. குறிப்பாக காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவர்களை விஜய் தனது பனையூரில் உள்ள இல்லத்தில் அழைத்து பாராட்டு தெரிவித்தது மட்டுமில்லாமல் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அப்பொழுது தொடர்ந்து ரசிகர்களிடம் மக்கள் பணியாற்ற வேண்டும் என கோரிக்கையும் விடுத்திருந்தார். 



 

நடிகர் விஜய், மக்கள் இயக்க நிர்வாகிகளிடம் "முதலில் உங்கள் குடும்பத்தை பாருங்கள் அதன் பிறகு மக்கள் பணி செய்யலாம்" எனவும் அறிவுறுத்தி உள்ளார் . அதேபோல வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள் எனவும் கூறியுள்ளார் . நடந்து முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் 115 வார்டு உறுப்பினர் பதவிகள் , தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளை கைப்பற்றி இருந்தனர். இந்நிலையில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் வகையில் செங்கல்பட்டு மாவட்ட தொண்டரணி தலைவர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இதனை அடுத்து நகர்புற தேர்தலிலும், விஜய் மக்கள் இயக்கம் அதிக இடங்களில் வெற்றி பெற வியூகங்களை வகுத்து செயல்படத் தொடங்கியுள்ளது.

 



இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்ட அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டு அருகே திருமணியில் மாவட்டத் தலைவர் எம்.எஸ்.பாலாஜி தலைமையில் இன்று நடைபெற்றது. நகர்ப்புற தேர்தலில் போட்டியிடுவது, வாக்காளர் பட்டியல் முகாம்களில் இயக்கத்தினர் பங்கேற்று 18 வயது பூர்த்தியானவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வது உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.



மேலும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 125-க்கும் மேற்பட்டோர் விருப்பமனு செய்திருந்தனர். இந்தக் கூட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து 150-க்கும் மேற்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் கலந்துகொண்டனர்.

 



ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர், "ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றது போல் நகர்ப்புற தேர்தலில் வெற்றி பெற முடியாது. நகராட்சித் தேர்தலில் வார்டு கவுன்சிலர் பதவி சுமார் 3000 முதல் 5000 ஓட்டுகள் வரை இருக்கும். அதற்கேற்றார் போல் நாமும் அமைப்பு வலிமையாக இருந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும் முதலில் அமைப்பை உருவாக்கும் வேலையில் இறங்குங்கள். மக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்று தெரிந்தால் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று பொதுமக்களை அணுக வேண்டும். ஊடகங்களில் மக்கள் பிரச்சனை அல்லது அவர்கள் படும் கஷ்டத்தை ஒளிபரப்பினால் உடனடியாக அந்த இடத்திற்குச் சென்று அவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும். தொடர்ந்து மக்களுடன் நெருக்கமாக இருங்கள் என தெரிவித்தார்.