திருவள்ளூர் மாவட்டத்தில் பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தப்பட்ட இளம்பெண் ஒருவர், உடலில் 60 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். தனக்கு உதவி செய்யுமாறு, நடிகர் விஜய்யிடம் கோரிக்கை விடுத்த அந்தப் பெண், அவரை நேரில் சந்திக்க விருப்பம் தெரிவித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து, இதுதொடர்பாக நடிகர் விஜய், அந்த பெண்ணுக்கு உதவி செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கை குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது.




 

இதனிடையே, நடிகர் விஜய் தரப்பில் எந்த பதிலும் தெரிவிக்காமல் இருந்து வருவதாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழர் முன்னேற்றப் படை என்ற கட்சியை சேர்ந்த சிலர் எச்சரித்து வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தனர். அந்த வரும் 15-ந்தேதிக்குள் விஜய் அந்த பெண்ணை சந்திக்காவிட்டால், வாரிசு திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளின் வாசலில் நடிகர் விஜய்யின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தப்படும் என தமிழர் முன்னேற்றப் படை கட்சியினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். 

 

இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை நேரில் சந்தித்து அவருக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினர். மேலும் அவருக்கு தேவைப்படும் உதவிகளை செய்து தருவதாகவும் அவர்கள் உறுதி அளித்துள்ளனர். பாதிக்கப்பட்டதாக புகார் தெரிவித்த சிறுமியை சந்தித்து திருவள்ளூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் உதவி செய்திருக்கும் சம்பவம் பாராட்டுகளை பெற்றது மட்டுமில்லாமல் சமூக வலைதளங்களில் இது குறித்த தகவல்கள் வேகமாக பரவி வருகின்றன. மேலும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அந்த பெண்ணிற்கு வேறு எந்த உதவி தேவைப்பட்டாலும் செய்து தருவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.