விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் விக்னேஷ் மரணமடைந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட காவல்துறையினரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை தலைமை செயலக குடியிருப்பு போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் இரவில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஆட்டோவில் கஞ்சா மற்றும் ஆயுதங்களுடன் வந்த விக்னேஷ் என்பவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர். போலீஸ் விசாரணையில் அவர் மரணம் அடைந்தது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கொலை, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிறப்பு உதவி ஆய்வாளர் குமார், பவுன்ராஜ் , காவல்துறையினர் முனாப், ஜெகஜீவன், சந்திரகுமார், ஊர்காவல் படையை சேர்ந்த தீபக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஜாமீன் கோரி இவர்கள் தாக்கல் செய்த மனு நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வாகன சோதனையின் போது, விக்னேசிடம் ஆயுதம், கஞ்சா இருந்ததாகவும் போலீசை பார்த்ததும் அவர் தப்பியோடியபோது, கீழே விழுந்து படுகாயம் அடைந்ததாகவும், இந்த காட்சி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளதாகவும், காவல்துறையினர் தாக்கியதால் மட்டும் விக்னேஷ்க்கு காயம் ஏற்படவில்லை என வாதிடப்பட்டது.
மேலும் ஊர்காவல் படை வீரர் தீபக்கிற்கும் இந்த வழக்கிற்கும் சம்பந்தமே இல்லாத நிலையில், அவரையும் இந்த வழக்கில் கைது செய்துள்ளதாகவும் மனுதாரர்கள் கடந்த 67 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளதாகவும், காவல்துறை விசாரணை பெரும்பகுதி முடிந்து விட்டதால் ஜாமீன் வழங்க வேண்டும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விக்னேஷின்ன் சகோதரர் வினோத் தரப்பு வழக்கறிஞர், கொலை நடந்தவுடன் விக்னேஷ் உறவினருக்கு ரூ.1 லட்சத்தை போலீசார் கொடுத்து, கொலையை மறைக்க முயற்சித்தாகவும் போலீஸ் விசாரணையில் கொடூரமாக தாக்கியதால், அவர் இறந்துள்ளதாகவும் வாதிடப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் ஏராளமான காயங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய போவதாக கூறினார். இதையடுத்து, மனுதாரர்கள் தரப்பில் மனுக்களை திரும்ப பெறுவதாக தெரிவித்ததை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுக்களை திரும்ப பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்