சென்னைக்கு கனமழை, அதிகனமழை அபாய வாய்ப்பு நீங்கியதாக வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு  பகுதியாக தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில்  தமிழக,  புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும். அடுத்த இரு தினங்களில் தமிழக - கேரள பகுதிகளை கடந்து செல்லக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இன்னும் இலங்கை கடற்பகுதியை ஒட்டி கிழக்கு வடகிழக்கில் உள்ளது, மேலும் இது நமது கடற்கரையிலிருந்து வெகு தொலைவில் இருப்பதால், கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இன்றும் டெல்டா முதல் சென்னை வரையிலான கடற்கரை பகுதிகளில் கன மழையும், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், சேலம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர் போன்ற அருகிலுள்ள மாவட்டங்கள் அனைத்திலும் மிதமான மழை பெய்யும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.



நாகை கடற்கரைக்கு அருகில் காற்றழுத்த தாழ்வு பகுதி நகரும் போது, ​​ உள்பகுதிகளிலும் மேற்கிலும் கனமழை பெய்யும், அதுவரை லேசானது முதல் மிதமான மழை மட்டுமே பெய்யும். எனவே மேற்கு, தெற்கு மற்றும் உள் பகுதிகளில் கனமழை என்பது சற்று தாமதமாக தொடங்கும். அதே நேரத்தில் இன்று முழுவதும் அப்பகுதிகளில் மிதமான மழை பெய்யும்.


நேற்று சென்னையை பொறுத்தவரை நகரத்தில் 6-9 செ.மீ வரையில் பரவலான மழை பதிவாகியுள்ளது, நவம்பர் 11-14 வரை சுமார் 30 செ.மீ. மழை பதிவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. சென்னை மற்றும் அதன் இணை பகுதியான கேடிசியில் இன்று இடைவேளியுடன் மழை பெய்யும். குறிப்பாக இரவு நேரங்களில் கன மழை நீடிக்கும்., சென்னைக்கு வடகிழக்கே 100 கிலோமீட்டர் தொலைவில் மேகங்கள் வரிசையாக இருப்பதால் அடுத்தடுத்து மிதமான மழை இருக்கும் என தமிழ்நாட்டின் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.


இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை,  நாகப்பட்டினம், திருவாரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, நாளை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  


இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறாது, மேலும் வரும் 15ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது