தென்மாவட்டங்களில் நோக்கி  சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக பயணம் செய்யும்பொழுது , பரனூர் சுங்கச்சாவடி அருகே அமைந்திருக்கும் ஏராளமான சாலையோர இளநீர் கடைகளை  கடைகளை பார்த்திருப்பீர்கள். அங்கு இருக்கும் இளநீர் கடைகளில் அந்த வழியாக செல்லும்பொழுது,  நான் இளநீர் குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.



 

கடந்த சில நாட்களுக்கு முன் மறைமலைநகரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தேன், வழக்கம்போல் அங்கிருக்கும் இளநீர் கடை நிலையில் இளநீர் குடிக்கலாம் என்று இளநீர் கடையை  தேடியபொழுது, நான் வழக்கமாக குடிக்கும் கடை உட்பட, நிறைய கடைகள் அனைத்தும் அடைத்திருந்தது. வாகனத்தில் இளநீரை வைத்து இரண்டு பேர் மட்டுமே வியாபாரம் செய்து கொண்டிருந்தனர்.



அவர்களை சந்தித்து ஏன் இன்று இவர்கள் கடை போடவில்லை என கேட்டபொழுது,  இந்த இடத்தில் கடை வைத்து வியாபாரம் நடத்துவதற்குக் காவல்துறையினர் கடந்த இரண்டு மாதமாகவே அனுமதி மறுத்துள்ளதாகவும், கடந்த சில நாட்களாக காவல்துறையினரின் தொடர் கெடுபிடியின் எதிரொலியாக கடையை அனைவரும் பூட்டிவிட்டுச் சென்று உள்ளதாக தெரிவித்தனர். மேலும் அவர்களிடம் விசாரித்ததில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம், இவ்விடத்தில் இளநீர் விற்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை மனு அளித்திருப்பதாக தெரிவித்தனர்.

 

சுங்கச்சாவடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோரங்களில் இவ்வாறு இளநீர் கடை வைப்பதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுவதால், இவ்விடத்தில் சாலையோர இளநீர் கடை வைக்கக்கூடாது என்று காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் தங்களுடைய வாழ்வாதாரம் முழுமையாக பாதிப்படைந்துள்ளதாக வியாபாரிகள் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். 



இது தொடர்பாக 15 ஆண்டுகளுக்கு மேலாக சுங்கச்சாவடி சாலை ஓரத்தில் கடை வைத்திருக்கும் தேன்மொழி கூறுகையில், ”சுங்கச்சாவடி துவங்கிய காலகட்டத்தில் இருந்து தாங்கள் கடை வைத்து வருவதாகவும், இதை நம்பிதான் தன்  குடும்பம் இருப்பதாகவும் தெரிவித்தார். போக்குவரத்துக்கு எந்தவித இடைஞ்சலும் இன்றி, காவல்துறையினர் அறிவுறுத்தியபடி மண்தரையில் தான் நீண்ட காலமாக வியாபாரம் செய்து வருகிறோம். இளநீர் குடிக்க வருபவர்கள் 5 நிமிடத்திற்கு மேல் இங்கு இருக்க மாட்டார்கள். உடனே இங்கிருந்து சென்று விடுவார்கள். எங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாது, இருந்தும் காவல்துறையினர் தொடர்ந்து எங்களை கடைவைக்கக்கூடாது என அப்புறப்படுத்துவது நியாயமற்றது” என தெரிவித்தார்.



இதுகுறித்து டில்லிராணி என்பவர் கூறுகையில், ”சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இங்கு இருக்கும் இளநீர் கடை நம்பித்தான் இருக்கிறோம். மழைநாளில் சுத்தமாக வியாபாரம் இருக்காது. திடீரென்று  முழுமையாக வெளியேற வேண்டும் என்று காவல்துறையினர் கூறுவது எந்த விதத்தில் நியாயம். ஒரு இளநீர் விற்றால் 5 ரூபாய் மட்டுமே லாபம் கிடைக்கும். நாளொன்றுக்கு நாங்கள் 50 இளநீர் விற்றால் கூட 250 ரூபாய் மட்டுமே கிடைக்கும். இதை வைத்துத்தான் எங்கள் குடும்பம் நடத்தி வருகிறோம், மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு எங்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தயவுசெய்து மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு , எங்களை வாழ வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.



 

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, ”போக்குவரத்து நெரிசல் காரணமாகத்தான் கடை வைக்க வேண்டாம் என்று கூறியுள்ளார் . இதுகுறித்து வருவாய் துறையுடன் இணைந்து போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.

 

போக்குவரத்துக்கு நெரிசல் இல்லாமல் ஏழைகள் வாழ்வாதாரமும் பாதிக்காமல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே பொதுமக்களின் கருத்தாக உள்ளது.