கடலூர் மாவட்ட கடல் பகுதியில் பாண்டிச்சேரியை சேர்ந்த மீனவர்கள் தடைசெய்யப்பட்ட சுருக்குமடி படகுகள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மீன்துறை உதவி இயக்குநர் சின்னகுப்பன் தலைமையில் ஆய்வாளர் மணிகண்டன், கடலோர பாதுகாப்பு குழும உதவி ஆய்வாளர் விவேகானந்தன் மற்றும் இதர அலுவலர்கள் ரோந்துப்பணி மேற்கொண்டனர். ரோந்துப்பணியின் போது பாண்டிச்சேரி மீனவர்கள் இருக்கும் இடத்தை பார்த்த அதிகாரிகள் அவர்களிடம் இருக்கும் சுருக்குமடி படகுகளை  பறிமுதல் செய்ய முயன்ற போது, அங்கிருந்த சுமார் 30 சுருக்குமடி படகுகளில் இருந்த 700க்கும் மேற்பட்ட மீனவர்கள் அதிகாரிகளை சூழ்ந்து பணிசெய்ய விடாமல் தடுத்ததோடு மிரட்டல் விடுத்தனர். 



இந்நிலையில் மீன்துறை அதிகாரிகள் அவர்களை கைது செய்யவோ  அனைத்து சுருக்குமடி வலைகளையும் படகுகளையும் பறிமுதல் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது அதனால் கடலூர் மாவட்ட கடல் பகுதியிலிருந்து அதிகாரிகளால் பாண்டிச்சேரி மீனவர்களின் படகுகள் விரட்டியடிக்கப்பட்டது. ஏற்கனவே கடலூர் கண்காணிபாளர் சக்திகணேசன் கடலூர் மாவட்டத்தில் இதற்கு முன்னரே சுருக்குமடி வலை மற்றும் இழுவலை சார்ந்து தடையானது உள்ளது இதுமட்டுமின்றி தற்பொழுது தமிழ்நாடு கடல் மீன்பிடிப்பு ஒழுங்குப்படுத்தும் சட்ட விதிகளை பின்பற்றாமல் விசைப்படகுகள் செயல்படுவதாக தொடர் புகார்கள் வருகிறது. இதனால் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் அவர்கள் பிறப்பித்துள்ள உத்தரவை கடைபிடிக்குமாறு  மீனவர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார்.



அந்த உத்தரவில், கரையிலிருந்து ஐந்து கடல் மைல்களுக்குள் இயந்திர மீன்பிடி படகை மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது, அரசு நிர்ணயித்த 240 குதிரைத்திறன் கொண்ட இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிவேக திறன் கொண்ட இயந்திரங்கள் பயன்படுத்தக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது, இழுக்கப்பட்ட நிலையில் 25 மில்லி மீட்டருக்கு குறைவான கண்ணியளவு கொண்ட செவுள் வலைகளை பயன்படுத்தக்கூடாது, இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளில் சுத்து வலை மற்றும் பேந்த வலைகளை மற்றும் சிறிய வகை இழுவலைகளை பயன்படுத்தக்கூடாது. என கிட்டத்தட்ட 10 உத்தரவுகளை பின்பற்றுமாறு கேட்டுக்கொண்டார்.



இந்த உத்தரவுகளிள் முக்கியமாக சுருக்குமடி மற்றும் இழுவலைகளை பயன்படுத்தக்கூடாது என கூறியிருந்தனர். ஆனால் தற்பொழுதோ பாண்டிச்சேரி பகுதியை சார்ந்த மீனவர்கள் பயன்படுத்தக்கூடாது என உத்தரவிடப்பட்டிருந்த சுருக்குமடி வலைகளை பயன்படுத்தியே மீன்பிடித்து வந்துள்ளனர். இவ்வாறு கடலூர் மீன்வளத்துறை உதவி இயக்குநரால் உத்தரவிடப்பட்ட விதிகளை பின்பற்றாமல் கடலூர் கடற்பகுதியில் பாண்டிச்சேரி மீனவர்கள் மீன்பிடித்தது , மற்றும் அதனை மீன்வளத்துறை அதிகாரிகளால் அதனை பறிமுதல் செய்யமுடியாமல் போனது கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று பாண்டிச்சேரி படகுகள் கடலூர் பகுதிகளில் சுருக்குமடி மீன்பிடிப்பு செய்வதால் கடலூர் மீனவ கிராமங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை எழும் நிலை ஏற்பட்டுள்ளது.