Vegetables Price: வரத்து குறைவு காரணமாக வெளிசந்தையில் சின்ன வெங்காயம் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.


உரிப்பவர் கண்களில் இருந்து மட்டும் வரவழைக்கும் வெங்காயம் தற்போது அதன் விலையை கேட்பவர் கண்களில் இருந்தும் கண்ணீரை வரவழைக்கிறது. சாம்பாருக்கு பயன்படுத்தப்படும் சின்ன வெங்காயத்தின் விலை இன்று ரூபாய் 100க்கு விற்பனை செய்யப்படுகிறது.


கடந்த 6 மாதங்களாக குறைந்த விலைக்கு விற்கப்பட்ட வந்த சின்ன வெங்காயம் தற்போது உயர்ந்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் சின்ன வெங்காயம் விலை ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூபாய் 65க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர் மழை காரணமாக வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டதால் அதன் வரத்து குறைந்துள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.


மேலும் சில்லறை விற்பனையில் சின்ன வெங்காயம் ரூபாய் 100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சின்ன வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரிய வெங்காயத்தினை பெரும்பாலும் வாங்குகின்றனர். கடந்த ஜனவரி முதல் ரூபாய் 20 முதல ரூபாய் 30 வரை மட்டுமே விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயத்தின் விலையும் உயர்ந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


திண்டுக்கல்: தொடர் மழை காரணமாக திண்டுக்கல்லில் வெங்காயம் விலை கடுமையாக உயர்ந்து இருக்கிறது. திண்டுக்கல்லில் வெங்காயத்திற்கு தனி சந்தை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த சந்தை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே செயல்படும். அதாவது திங்கள், புதன், வெள்ளி நாட்களில் மட்டுமே செயல்படும். இங்கு சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தை பொறுத்தவரை  தேனி, கரூர், திருச்சி, சேலம் போன்ற வெளியூர்களில் இருந்து திண்டுக்கல் சந்தைக்கு கொண்டு வருவது வழக்கம்.


மேலும் பெரிய வெங்காயம் மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஜனவரி மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை சின்ன வெங்காயத்தின் விலை குறைவாகவே இருந்தது. இந்நிலையில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்த மழை பெய்து வருவதால் சின்ன வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், தற்போது சின்ன வெங்காயம் ரூபாய் 65க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


 தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திராவில் இருந்தும் தினமும் காய்கறிகள் தமிழ்நாட்டின் பெரும்பாலான சந்தைகளுக்கு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. குறிப்பாக சின்ன வெங்காயம் விலை மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. இதுபோன்று தக்காளி விலையும் உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூபாய் 30க்கு  விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிலோ ரூபாய் 100க்கு விற்கப்படுகிறது.