வண்டலூர் உயிரியல் பூங்கா ( Arignar Anna Zoological Park )


சென்னை புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் முக்கிய சுற்றுலா தளமாக, அறிஞர் அண்ணா வண்டலூர் உயிரியல் பூங்கா செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர், வெளியூர் , வெளி மாவட்ட மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரியல் பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வரும் விலங்குகளை கண்டு ரசிக்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் கோடை விடுமுறை போன்ற தினங்களில் வழக்கத்தை விட மூன்றிலிருந்து , நான்கு மடங்கு அதிக அளவு மக்கள் உயிரியல் பூங்காவிற்கு வருகை புரிவது வழக்கம். 





2000 விலங்குகள் ( Vandalur Zoo Animals )


வண்டலூர் பூங்காவில் வெள்ளைப் புலிகள், வங்க புலிகள், சிங்கம், சிறுத்தை உள்ளிட்ட சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. மேலும் வண்ணத்துப் பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, இரவு நேர விலங்குகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கோடை விடுமுறை என்பதால், வண்டலூர் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இருக்கும் உயிரியல் பூங்காக்களில், சிறந்த பூங்கா என்ற விருதையும் வண்டலூர் உயிரியல் பூங்கா பெற்றுள்ளது. 


கட்டண உயர்வு ( Vandalur Zoo Entry Fee )


பூங்காவிற்கு வரும் பெரியவர்களின் நுழைவு கட்டணம் ரூபாய் 115-இல் இருந்து ரூபாய் 200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகன கட்டணம், ரூபாய் 100-இல் இருந்து ரூபாய் 150-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லயன்/  மான் உள்ளிட்ட சபாரி வாகன கட்டணம் ரூபாய் 50 லிருந்து ரூபாய் 150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடியோ ஒளிப்பதிவு  கட்டணம் ரூபாய் 500 ல் இருந்து ரூபாய் 750 ஆக நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு  515 ரூபாய்  இருந்து வந்த நிலையில், தற்பொழுது அவை குறைக்கப்பட்டு 200 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.




அதிகரிக்கும் பராமரிப்பு செலவு


விலங்குகள் பராமரிப்பு மற்றும் ஊழியர்களின் சம்பளம் ஆகியவற்றிற்கு வருடத்திற்கு 13 கோடி ரூபாய் வரை தேவைப்படுவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, பல்வேறு விலங்குகளின் பராமரிப்பு செலவும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த விலை உயர்வு கொண்டுவரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




 


 திருத்திய நுழைவு கட்டணம் அமைப்பிலுள்ள சிறப்பு அம்சங்கள்   என்னென்ன ?  


5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தற்பொழுது இலவச நுழைவு கட்டணம் தொடர்கிறது.  சைக்கிள் மற்றும் ரிக்ஷாவுக்கு நிறுத்தும் இட கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள். மூன்று சக்கர வாகனங்கள். நான்கு சக்கர வாகனங்கள், வேன்,  மினி பேருந்து மற்றும் பேருந்துக்கான நிறுத்த கட்டணம் மணிக்கணக்கில் இருந்து நாள் கணக்கில் நிர்ணயிக்கப்படுகிறது.  இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டினருக்கு ஏற்கனவே உள்ள இரு வேறு கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டு ஒரே மாதிரியான கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.



 சலுகை கட்டணம்  


5 முதல் 12 மற்றும் 13 முதல் 17 வயது வரை உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இரண்டு அடுக்கு கட்டணம் ஒரு குழுவாக நிர்ணயிக்கப்பட்டு அவர்களுடன் வரும் ஆசிரியர்களுக்கும் சலுகை கட்டணமாக ரூபாய் 20 மட்டுமே வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது





பூங்கா நுழைவு கட்டணம் கடந்து வந்த பாதை


2017-ஆம் ஆண்டு வரை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெரியவருக்கான நுழைவு கட்டணம் 30 ரூபாய் இருந்தது. அதன் பிறகு படிப்படியாக உயர்த்தப்பட்ட கட்டணம் , 2020 நவம்பர் மாதம் முதல் 90 ரூபாயாக இருந்து வருகிறது. இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.