வண்டலூர் பூங்கா


செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. இங்கு இரண்டாயிரத்திற்கும் அதிகமான விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்த பூங்காவில் வெள்ளைப் புலிகள், வங்கப் புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள், யானைகள், மனித குரங்கு, காண்டாமிருகம், நீர்நாய், முதலைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் உள்ளது. பணியாளர்கள் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் விலங்குகளின் செயல்பாடு நடவடிக்கைகளை  24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர். 


தொடர் கண்காணிப்பு


விலங்குகளுக்கு சிறிதாக ஏதாவது நோய்த் தொற்று பிரச்னை ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவர் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவர்கள் விலங்குகளை பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சைகளை அளித்து வருகின்றனர். மேலும், தினமும் விலங்குகளின் உடல்நிலை குறித்த விவரங்களையும் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுக்கு மேலாக வைரஸ் தொற்றின் காரணமாக எதிர்பாராத விதமாக சிங்கம், புலி உள்ளிட்ட உயிரினங்கள் உயிரிழந்து வருவது வாடிக்கையாக இருந்து வந்தது . அதேபோல் சமீபத்தில் கூட வரிகுதிரை வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தது.



சிங்கம்

 

வண்டலூர் உயிரியல் பூங்காவில், சுமார் 32 வயதான மணி என்ற சிங்கம் இன்று காலை வயது மூப்பு காரணமாக உயிரிழந்தது. காடுகளில் வாழும் சிங்கத்தின், சராசரி ஆயுட்காலம் 20 என கூறப்படும் நிலையில், சுமார் 32 காலம் வாழ்ந்த மணி என்ற சிங்கம் உயிரிழந்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை காரணமாக சிகிச்சை பெற்று வந்த மணி உயிரிழந்தது. 

 

கடந்த 6 மாதங்களில் 5க்கும் மேற்பட்ட சிங்கம் உயிரிழந்துள்ளது. தற்போது பூங்காவில் 10 சிங்கங்கள் மட்டுமே உள்ளன. உயிரிழந்த சிங்கம் கள்ளக்குறிச்சி சிறு பூங்காவில் இருந்து கடந்த 2000ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. கள்ளக்குறிச்சி பூங்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிங்கம் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 22 ஆண்டுகளாக பராமரித்து வந்த நிலையில் இன்று அதிகாலை 7 மணி அளவில் இறந்தது பூங்கா ஊழியர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.