ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு ஏராளமான மக்கள் பயணம் செய்வார்கள், பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (டிஎன்எஸ்டிசி) மற்றும் மாநில விரைவு போக்குவரத்து கழகம் (எஸ்இடிசி) மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கடந்த வருடங்களில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளுக்காக பல்வேறு இடங்களிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு ஆயுத பூஜை விழாவிற்காக 12.10.2021 மற்றும் 13.10.2021 ஆகிய தேதிகளில் 3 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டு பயணிகளுக்கு பயன்படும் வகையில் இயக்கப்பட்டது. தமிழகத்தில் ஆயுத பூஜை இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படும் நிலையில், வெள்ளி ஒரு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டால் சனி, ஞாயிறு எனதொடர் விடுமுறை வருகிறது. இந்நிலையில் ஆயுத பூஜையைசொந்த ஊரில் கொண்டாடு வதற்காக சென்னையில் இருந்து நேற்று மதியம் முதல் ஏராளமான மக்கள் புறப்பட்டு சென்றனர்.



சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலைக்குப் பிறகு கூட்டம் குவிந்ததால், ஜிஎஸ்டி உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, "பயணிகள் கூட்டத்துக்கு ஏற்றார் போல், நள்ளிரவு வரையில் சிறப்பு பேருந்துகளை வரிசைப்படுத்தி இயக்கினோம். சென்னையில் இருந்து இயக்கப்படும் 2000 பேருந்துகளோடு 600 சிறப்பு பேருந்துகளை இயக்கினோம். மேலும், பண்டிகை முடிந்த பிறகும் பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு போதிய அளவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்’’ என்றனர்.



பண்டிகைக் காலத்தில் கூட்டம் அதிகமாக இருப்பதைப் பயன்படுத்தி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்திருந்தார். மேலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னிப் பேருந்துகளை சிறைபிடிக்க வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. எல்லா ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருந்ததை ஒட்டி நேற்று மட்டும் சென்னையில் இருந்து ஒரேநாளில் 2,43,900 பேர் அரசு பேருந்துகளில் வெளியூருக்கு பயணம் செய்துள்ளனர். நேற்று  சிறப்பு பேருந்துகள் உள்பட மொத்தம் 5,422 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. நான்கு நாள் தொடர் விடுமுறைக்காக ஊருக்கு சென்றவர்கள் ஞாயிறு மற்றும் திங்கள் இரவு மீண்டும் பேருந்திலும் ரயிலிலும் ஏறி வருவார்கள். அதற்கேற்ப வசதிகளையும் போக்குவரத்து துறை செய்து வருகின்றனர். விடுமுறைக்காக பலரும் சொந்த ஊருக்கு சென்றுவிட்டதால் இன்று காலை முதலே சென்னையில் வழக்கத்திற்கு மாறாக டிராஃபிக் குறைவாகவே காணப்படுகிறது.