புதுச்சேரி வெள்ளாளர் வீதியில் தனியார் மது பாருடன் கூடிய தங்கும் விடுதி உள்ளது. அங்கு நேற்று முன் தினம் மாலை விடுதி உரிமையாளர் ராஜேஷ் குமார் (31) இருந்தார். அப்போது 5 பேர் அங்கு வந்து மது குடித்தனர். அதற்கான பணம் 1,600 ரூபாயை கேட்டபோது, எங்களிடமே பணம் கேட்கிறாயா? என்று கூறி ராஜேஷ் குமாரை அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. ராஜேஷ் குமாரிடம் இருந்து 1,000 ரூபாயை பறித்து கொண்டு தப்பிச் சென்றனர்.
சிறிது நேரம் கழித்து 5 பேரும் மீண்டும் திரும்பி வந்து அங்கு பணியில் இருந்த ஊழியர் திவான் (18) என்பவரை கடத்திச் சென்று அந்த பகுதியில் உள்ள இருட்டான இடத்தில் வைத்து தாக்கி மாதந்தோறும் எங்களுக்கு 5,000 ஆயிரம் மாமூல் தர வேண்டும், இல்லையென்றால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. பின்னர் திவானை விடுவித்து விட்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்த ராஜேஷ்குமார், திவான் ஆகிய 2 பேரும் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்த புகாரின் பேரில் பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் உத்தரவின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு ரச்சனாசிங் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது ராஜேஷ்குமார், திவான் ஆகியோரை தாக்கியது கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்த விக்கி என்ற விக்னேஷ் (28) மற்றும் அவரது கூட்டாளிகள் என்பது தெரியவந்தது. உடனே போலீசார் விரைந்து சென்று விக்கியை கைது செய்தனர்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில், விக்கியின் கூட்டாளிகளான கோவிந்த சாலை கல்வே பங்களாவை சேர்ந்த ஜெய் என்ற ஜெயகுமார் (26), குபேர் நகரை சேர்ந்த அருண் என்கிற சோனி (28), கென்னடி நகரை சேர்ந்த நாகராஜ் என்கிற பாம்பு நாகராஜ் (28), கண்டாக்டர் தோட்டம் அரசு குடியிருப்பை சேர்ந்த முகேஷ் (19) ஆகியோர் என்பது தெரியவந்தது. உடனே அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இவர்களில் விக்கி, ஜெயகுமார், அருண் ஆகிய 3 பேர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், ரவுடிகள் பட்டியலில் இருப்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா பரிசோதனைக்கு பின் ரவுடிகள் 5 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.