காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில், 5746 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைய உள்ளது. இதில் 3700 ஏக்கர் பட்டா நிலம் என்பதால், நிலம் கையகப்படுத்தும் பணி வருவாய்த்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பரந்தூர் விமான நிலையம் - Parandur Greenfield Airport
குறிப்பாக நெல்வாய், நாகப்பட்டு, ஏகனாபுரம், தண்டலம் மற்றும் மகாதேவி மங்கலம் ஆகிய கிராமங்களில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளன. விமான நிலையம் அமைக்க கூடாது என ஏகனாபுரம், நாகப்பட்டு, தண்டலம் ஆகிய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் போராட்டத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து, திட்டத்தை செயல்படுத்தும் பணியில் அரசு சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக அதிகம் பாதிக்கப்படும் ஏகனாபுரம் கிராம மக்கள், 900 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
தமிழக வெற்றி கழகம் ஆதரவு
தமிழக வெற்றி கழகம் மாநாடு நடைபெற்ற போது பரந்தூர் விமான நிலையம் போராட்டக் குழுவினருக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விவசாயிகளை பாதிக்கும் விமான நிலைய திட்டங்கள் கூடாது என்று விஜய் அறிவித்திருந்தார்.
கட்சி துவங்கியதிலிருந்து களத்திற்கு வரவில்லை என்று விஜய் மீது தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. நலத்திட்ட உதவிகள் கூட பனையூர் அலுவலகத்திற்கு அழைத்துவரப்பட்டு கொடுத்தது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்தநிலையில் விஜய் தன் மீது இருக்கும் குற்றச்சாட்டை சரி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விவசாயிகளை சந்திக்க திட்டம் ?
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் போராட்ட குழுவினர் மற்றும் கிராம மக்களை சந்தித்து ஆதரவு தர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையிடம் அனுமதி கேட்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பொங்கல் முடிந்த பிறகு ஜனவரி மூன்றாம் வாரத்தில் இந்த சந்திப்பு கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.