சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை இயக்கக்கூடிய மின்சார ரயில்கள் (Chennai Beach to Chengalpattu Train) சென்னை புறநகர் மற்றும் சென்னை உள்பகுதிகளை இணைக்க கூடிய போக்குவரத்து சேவையாக இருப்பதால், தினமும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். ரயில் கட்டணமும் மிகக் குறைவு என்பதால் வேலைக்கு செல்பவர்கள்  மின்சார ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். பேருந்தில் செல்வதை விட ரயிலில் செல்வது கட்டணம் குறைவு என்பதால், தினமும் வேலைக்கு செல்பவர்கள் ரயில் பயணத்தை விரும்புவார்கள்.


 


 பராமரிப்பு பணிகள்


 


சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு காலை 9.30 மணி முதல் பகல் 12:50 மணி வரை செல்லும் ரயில்கள் அனைத்தும் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. இதேபோன்று சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டுக்கு செல்லும் இரவு 10:40 முதல் 11:59 வரை இயக்கப்படும் அனைத்து ரயில்களும் ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக   தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டு இருந்தது.


 


பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு



தாம்பரம் ரயில்வே பணிமனையில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால், ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டதாக தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது. அறிவிப்பு வெளியாக்கியதிலிருந்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பும், இதை மாற்றியமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்தது. இந்தநிலையில் சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் நேற்று மாலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 2ஆம் தேதி வரை இரவு நேர ரயில்களை மட்டும் ரத்து செய்வதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.


 


இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது : தாம்பரம் ரயில்வே பணி மேம்பாட்டு பணிகளுக்காக, 55 ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் அதாவது ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2ஆம் தேதி வரையில் வழக்கமான காலை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயங்கும்.


இரவு 10:30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை இயக்கப்படும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு, அதற்கு மாற்றாக பயணிகளுக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்படும். இருப்பினும் வரும் ஜூலை 27, ஜூலை 28 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஏற்கனவே அறிவித்தபடி சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு காலை 9.30 மணி முதல் பகல் 12:50 மணி வரை செல்லும் ரயில்கள் அனைத்தும் இந்த 2 நாட்கள் மட்டும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோன்று ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் மற்றும் செங்கல்பட்டுக்கு காலை 9.30 மணி முதல் பகல் 12:50 மணி வரை செல்லும் ரயில்கள் அனைத்தும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது


 


 சிறப்பு ஏற்பாடுகள் என்ன ?


 


ரயில்கள் ரத்து செய்யப்படுவதற்கு மாற்றாக சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரம் வரை 15 ரயில்களும், பல்லாவரம் முதல் கடற்கரை வரை 14 ரயில்களும், செங்கல்பட்டு முதல் கூடுவாஞ்சேரி வரை 7 ரயில்களும், கூடுவாஞ்சேரியில் இருந்து செங்கல்பட்டு வரை 7 ரயில்களும் சிறப்பு ரயில்களாக இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


 


கூடுதல் பேருந்துகள் 


ரயில் ரத்தாகும் நாட்களில், வழக்கமான பேருந்துகளை விட கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்திருக்கிறது