நாளை முதல் போக்குவரத்து மாற்றம்:


மெட்ரோ பணி காரணமாக நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் காரணமாக, மாம்பலம் பிரதான சாலையில் தியாகராய கிராமனி சாலை சந்திப்பு முதல் ஹபிபுல்லா சாலை சந்திப்பு வரை போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 


சென்னையின் பல்வேறு பகுதிகளில் இதேபோன்று மெட்ரோ பணிகள் நடந்து வருவதால், வழக்கமாக செல்லும் பாதையை தவிர்த்து மக்கள் மாற்று பாதையில் பயணித்து வருகின்றனர். 


மெட்ரோ பணி


அந்த வகையில், சென்னை அடையாறு மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி வரை 42 கிமீ துாரத்திற்கு நீள்கிறது ஓ.எம்.ஆர். சாலை.  கடந்த 2006 ஆம் ஆண்டு, திமுக ஆட்சி காலத்தில், மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து சிறுசேரி சிப்காட் பூங்கா வரை இச்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டு ராஜிவ்காந்தி சாலையாக பெயர் சூட்டப்பட்டது.


இச்சாலையில், பெரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், கல்லுாரிகள், மருத்துவமனைகள் உள்ளன. இதனால் காலை, மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.


தற்போது மத்திய கைலாஷ் முதல் சோழிங்கநல்லுார் இடையே மெட்ரோ பணி நடக்கிறது. இதனால், வழக்கத்தை விட போக்குவரத்து நெரிசல் கூடுதலாக ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். அதிக நேரம் விரயம் ஏற்படுகிறது.


போக்குவரத்து நெரிசல்:


திருப்போரூர், கேளம்பாக்கம் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் திருவான்மியூரை கடந்து அடையாறு, பிராட்வே போன்ற பல்வேறு இடங்களுக்கு கல்வி, வேலை போன்ற பல தேவைகளுக்கு செல்கின்றனர். போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள், பேருந்தில் பயணிக்கும் பயணியர் கடும் சிரமத்தை சந்திப்பதாக கூறுகின்றனர்.


எனவே, ஓ.எம்.ஆர்., சாலை மெட்ரோ பணியால், திருப்போரூர் மற்றும் கேளம்பாக்கம் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள், மாணவர்கள், இ.சி.ஆர்., சாலையில் உள்ள கோவளம் சென்று அங்கிருந்து நீலாங்கரை, பாலவாக்கம், கொட்டிவாக்கம், திருவான்மியூர், அடையாறு பகுதிக்கு, மாநகர பேருந்துகளில் பயணித்து வருகின்றனர்.


கட்டுமான பணிகள்:


தலைநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இரண்டாம் கட்டமாக 118.9 கி.மீ தொலைவிற்கு மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் துவங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாம் கட்ட பணிகள் முடிந்து மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்து அமைய இருக்கிறது. 


இதில், மாதவரம் முதல் சிறுசேரி வரையிலான வழித்தடத்தின் 45.8 கிலோமீட்டருக்கான மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் 2026 ஆம் ஆண்டு நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மாதவரம் - சிறுசேரி வழித்தடத்தில் 50 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைய இருக்கிறது. இந்த வழித்தடத்திற்காக கிரீன்வேஸ் சாலையில் இருந்து அடையார் டெப்போ நோக்கி சுரங்கப்பாதை அமைக்கப்பட இருக்கிறது.