வெகு விமர்சியாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையானது வருகின்ற திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் தங்கி பணியாற்றி வரும், வட மாவட்டம் மற்றும் தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சென்னையில் இருந்து, தங்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர்.

 

இதனால் நேற்று மாலை 6 மணியிலிருந்து கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில் மற்றும் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் கடும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் அணிவகுத்து சென்றனர். போக்குவரத்து நெரிசல் காரணமாக பல கிலோமீட்டர் தூரத்திற்கு ஆங்காங்கே சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது .



 

இந்நிலையில் சனிக்கிழமையான இன்று காலை முதலே, பரனூர் சுங்கச்சாவடி பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காலை வேலை என்பதால், கார்களில் தென் மாவட்டத்தை நோக்கி பயணிகள் படையெடுக்க துவங்கியுள்ளனர். ஒரே நேரத்தில் அதிக அளவு கார்கள் குவிந்ததால், பரனூர் சுங்கச்சாவடியில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காலை முதலே பேருந்துக்காக பொதுமக்களும் காத்திருக்கின்றனர். இன்று மாலையும் கடும் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பெருங்களத்தூரில்..

 

இன்று காலை நிலவரப்படி பெருங்களத்தூரில் போக்குவரத்து நெரிசலானது மிதமான நிலையிலே உள்ளது. பேருந்துகளின் வரத்து அதிகரிக்க போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல கூடுவாஞ்சேரி மற்றும் மறைமலைநகர் ஆகிய பகுதிகளில் காலை நேரங்களில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 250 பேருந்துகள்

 

 

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அருகில் உள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது; தீபாவளி சிறப்பு பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.



இந்த பேருந்து சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு,மதுரை, திருநெல்வேலி ,திருச்சி, விழுப்புரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, பாபநாசம், தென்காசி ,ஆகிய பகுதிகளுக்கு அரசு விரைவில் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்யப்பட்டு அவர்கள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில், ஏறி பயணம் செய்யலாம் குறிப்பாக செங்கல்பட்டு, மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், பெருங்களத்தூர், படப்பை, கண்டிகை, திருப்போரூர், கிளாம்பாக்கம், மாம்பாக்கம் போன்ற பகுதிகளை சேர்ந்த பயணிகள் தென் மாவட்டங்களுக்கு செல்ல பேருந்து நிலைய பேருந்தில் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.

 



 அவர்கள் கோயம்பேடு சென்று ஏற வேண்டிய அவசியம் இல்லை, அதற்கு பதிலாக சிறப்பு ஏற்பாட்டாக மேற்கொள்ளப்பட்டுள்ள, கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் குறிப்பிட்ட நேரத்திற்கு பதிவு செய்யப்பட்டுள்ள பேருந்துகள் இங்கு வந்து பயணிகளை ஏற்றி செல்லும். அதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்பு பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை குறித்து கலெக்டர் ஆய்வு செய்தார்.

 

 அப்போது அவர் தெரிவித்ததாவது தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் ஆன்லைனில் முன்பதிவு செய்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் வந்து ஏறி பயணம் செய்யலாம். இங்கு வரும் பயணிகளுக்கு அடிப்படை வசதிகள், சுகாதாரம், பயோ டாய்லெட், மற்றும் மருத்துவ வசதி ஆகியவர்களை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



 

மேலும் காவல்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் பயணிகளுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள், பாதுகாப்பு பணியினை உதவி ஆணையர் சிங்காரவேலு தலைமையில் சிறப்பு காவலர்கள் பணியில் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

 

இன்று நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய மூன்று நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது. தினமும் 250 பேருந்துகள் வீதம் மேலும் அதற்கு மேலும் வர வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்தனர். மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய மேலாளர் லட்சுமி நாராயணன் தெரிவிக்கையில் பயணிகளுக்கு சிறப்பான பாதுகாப்பான பயணத்திற்கு இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் குடிநீர் வசதி, மருத்துவ வசதி, கழிப்பிட வசதி போன்றவற்றை ஏற்பாடு செய்துள்ளோம். மூன்று நாட்களுக்கு பேருந்துகள் இங்கு இருந்து புறப்பட்டு செல்லும் என்று அவர் தெரிவித்தார்.