தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் மேலும் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement


ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் வரும் 17 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதே தேதியில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.



நவம்பர் 18இல் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு


மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், ராமநாதபுரம்,  புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நவம்பர் 18ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.


சென்னையில் மழைக்கு வாய்ப்பு


சென்னை பெருநகர் மற்றும் புறநகரில் அடுத்த 48 மணி நேரத்தில், ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் குறைந்த வடகிழக்கு பருவமழை


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பைவிட 3% குறைவாக பெய்துள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இயல்பான நிலையில் 259.2 மி.மீ., மழை பொழியும் நிலையில் இன்று வரை 251.2 மி.மீ., மழை பொழிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதேபோல், சென்னையிலும் வடகிழக்கு பருவமழை இதுவரை இயல்பைவிட 15% குறைவாக பெய்துள்ளதாகவும் இயல்பான நிலையில் 447.9 மி.மீ., மழை பொழியும் நிலையில் இன்று வரை 380.3 மி.மீ., மழை பொழிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மீனவர்களுக்கு எச்சரிக்கை


தென்தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35-45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.