மோசடி கும்பலுக்கு வங்கி கணக்கு கொடுத்து ஆன்லைன் மோசடிக்கு உடந்தையாக செயல்பட்ட அக்கா, தம்பி கைது

Continues below advertisement


சென்னை கொரட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சதிஷ் ( வயது 46 ) இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், ஆன்லைன் பங்கு சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசைக் காட்டி உள்ளனர். இவரிடம் இருந்து சிறுக சிறுக 28.19 லட்சம் ரூபாயை, வங்கி கணக்கு வாயிலாக பறித்துள்ளனர். தான் ஏமாற்றப் பட்டதை உணர்ந்த சதிஷ், இம்மாதம் 3 - ம் தேதி ஆவடி மத்திய குற்றப் பிரிவில் புகார் அளித்தார். விசாரித்த இன்ஸ்பெக்டர் சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் சதிஷ் பணம் அனுப்பிய வங்கி கணக்கை ஆராய்ந்தனர்.





அந்த வங்கி கணக்கு திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த, பி.இ., பட்டதாரியான யோகேஷ் ( வயது 25 ) அவரது அக்கா ஹேமா ஸ்ரீ ரெட்டி ( வயது 29 ) என்பது தெரிந்தது. மோசடிக்கு உடந்தையாக வங்கி கணக்கு கொடுத்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், ஹேமாஸ்ரீ ரெட்டி, துபாயில் பணிபுரியும் போது, மோசடி நபர்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது.





பலரது பெயரில் போலி வங்கி கணக்கு துவங்கி அதை மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மோசடி கும்பலிடம் கொடுத்து அக்கா, தம்பி கமிஷன் பெற்றதும் தெரிய வந்தது. போலீசார், பூந்தமல்லி நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


ஸ்கூட்டரில் சென்ற நபரை நோட்டமிட்டு கத்தியை காட்டி மிரட்டி 2 லட்சம் ரூபாய் பணத்தை பறித்து தப்ப முயன்ற நான்கு பேர் கைது


சென்னை மண்ணடி பகுதியை சேர்ந்தவர் அமீது ( வயது 37 ) இவர், அதே பகுதியில் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் அரும்பாக்கத்தில் தன் நண்பரிடம் 2 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கி அதே பகுதியில் உள்ள ஏ.டி.எம்., இயந்திரம் மூலம் தன் கணக்கில் செலுத்த முயன்றார். இரண்டு வங்கி இயத்திரங்களில் பணத்தை போடமுடியாததால் அரும்பாக்கம், பசும்பொன் தெரு வழியாக ஸ்கூட்டரில் சென்றார்.


அப்போது அவரை ஸ்கூட்டரில் பின் தொடர்ந்த இருவர், அமீதுவிடம் கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து தப்பினர். அவர் சத்தம் போடவே, அங்கிருந்த சிலர் தப்பியோடிய திருடர்களில் ஒருவனை மடக்கி பிடித்து, அரும்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.


மற்றொருவர் பணத்துடன் தப்பினார். விசாரணையில், பிடிபட்டவர் பெரம்பூரை சேர்ந்த கார்த்திக் ( வயது 25 ) என்பது தெரிந்தது. அவர் அளித்த தகவலின்படி, வழிப்பறிக்கு மூளையாக செயல்பட்ட வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஜீவா ( வயது 23 ) அவரது கூட்டாளிகளான தியானேஸ்வரன் ( வயது 27 ) அஜித் ( வயது 25 ) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் இதே போல் வங்கியில் பணம் செலுத்தும் பலரிடம் வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது.