கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தே ஆம்னி பேருந்து இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்திருந்த நிலையில், அங்கு ஆம்னி பேருந்துகள் உள்ளே செல்லாதவாறு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் கோயம்பேட்டில் அதிகாரிகள் மற்றும் உரிமையாளர்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம்னிபேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிற்கும் நிலையில் பயணிகள் உள்ளே செல்லாதவாறு அதிகாரிகள் தடுத்து வருகின்றனர். இதனால் பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். 


ஆம்னி பேருந்துகள் இன்றிரவு முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. கிளாம்பாக்கத்தில் போதிய வசதிகள் இல்லை; திடீரென மாற்றம் செய்தால் முன்பதிவு செய்த பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என பல்வேறு காரணங்களை கூறி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தே ஆம்னி பேருந்து இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகள் பேருந்து நிலையத்திற்குள் செல்ல முடியாதவாறு தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.


ஆம்னி பேருந்துகளில் ஊருக்குச் செல்ல முன்பதிவு செய்தவர்களுக்கு பேருந்துகள் எங்கிருந்து கிளம்பும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது. கிளம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகள் இயக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். இந்த விவகாரத்தில் தெளிவாக முடிவு ஏதும் எட்டப்படாத நிலையில், இன்றிரவு சென்னையிலிருந்து வெளியூர்களுக்குச் செல்பவர்களின் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து ஊருக்குச் செல்ல முடியுமா என்ற கேள்வி பயணிகளிடம் எழுந்துள்ளது.




ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை 


கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் அனைத்து ஆம்னி பேருந்துகளையும் நிறுத்தி இயக்க சாத்தியக்கூறுகள் இல்லை; 90 நாட்களுக்கு   முன்னே முன்பதிவு செய்துள்ள ஆம்னி பேருந்து பயணிகளின் நிலை உள்ளிட்ட காரணங்களால் இன்று இரவு முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்குவது சாத்தியமில்லை என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர். 


சென்னையில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்திப்பில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் கூறுகையில் ” கோய்மபேடு பேருந்து நிலையத்தில் இருந்தே பேருந்துகள் இயக்கப்படும். கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளை நிறுத்த உரிய வசதிகள் இல்லை. 5 ஏக்கர் இடத்தில் என்ன கட்டுமான அமைப்பு இருக்கு? மழை பெய்தால் பேருந்துகள் நீரில் மூழ்கிவிடும் சூழலே உள்ளது. கிளாம்பாக்கத்திற்கு மாற்றும் சூழல் இல்லை. 2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். திடீரென எப்படி மாற்றம் முடியும்? இன்று (24.01.2024) மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு பேருந்து முன்பதிவு செய்துள்ளனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 144 பார்க்கிங் பே இருக்கிறது. ஆயிரம் பேருந்துகளை எப்படி நிறுத்த முடியும்? எங்களுடன் கலந்தாலோசிக்காமல் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் நலன்கருதி கோயம்பேடு பேருந்து நிறுத்ததில் இருந்தான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும். இதனால் பாதிக்கப்படுவது பயணிகள்தான். எனவே, முதலமைச்சர் இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்தே பேருந்து இயக்கப்பட வேண்டும் - போக்குவரத்து ஆணையம்


இ.சி.ஆர். சாலை மார்க்கம் நீங்கலாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாகம் பேருந்து நிலையத்தில் இருந்தே புறப்பட வேண்டும்; இன்று இரவு முதல் கிளாம்பாக்கத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுக்காப்பு ஆணையர் உத்தரவிட்டார்.


சென்னை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்தில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் 2023 டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை என்பதால் தென் மாவட்டங்களுக்கு கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்பட்டது. இதர பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், இந்த மாத இறுதிக்குள் அனைத்து போக்குவரத்து கழக பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்தார். ஆம்னி பேருந்துகள் கோய்மபேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டுவதற்கு அரசு அளித்த கால அவகாசம் இன்று (24/01/2024) இரவுடன் முடிவடைகிறது. இந்நிலையில், இரவு முதல் கிளாம்பாக்கத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுக்காப்பு ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்.” 24.01.2024 இரவு முதல் சென்னையிலிருந்து தெற்கு நோக்கி (ECR சாலை மார்க்கம் நீங்கலாக) செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகரக்குள் பயணிகளை ஏற்றுவதோ, இறக்குவதோ அனுமதிக்கப்படாது. ஏற்றாற்போல் RED BUS, ABHI BUS உள்ளிட்ட ஆம்னி பேருந்துகளுக்கு பயணச்சீட்டு முன் பதிவு செய்யும் செயலிகளில் தக்க மாற்றங்களை செய்திவுடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி பயணிகளுக்கு உரிய தகவலை வழங்காமல் அவர்களை தேவை இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாக்கும் ஆம்னி பேருந்துகளின் ஆப்ரேட்டர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின் படியும் மட்டுமல்லாமல் கிரிமினல் சட்டங்களின் படியும் நடடிவக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள்...



  • இ.சி.ஆர். மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகள்..

  • சென்னையிலிருந்து வேலூர் உள்ளிட்ட மேற்கு மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகள்..

  • சித்தூர், ரெட் ஹில்ஸ் வழியாக வடக்கு மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகள்..


இவை ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதிக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.


பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு விரைந்து ஓர் தீர்வை எடுக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்பாக இருக்கிறது.




 


மேலும் வாசிக்க..


கிளாம்பாக்கத்தில் மற்றொரு சிக்கல்.. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சொல்வது என்ன? தொடரும் குழப்பம்..