தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 24 மாவட்டங்களில் இதுவரை 1.5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். 


அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 பணியிடங்களைத் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்புவதற்கு பள்ளிக் கல்வித்துறை அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இந்த ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். 


ஜூலை 1ஆம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கான ஊதியம் ரூ.7,500-ரூ.12,000 என்ற வகையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும் இதற்குக் கடுமையான எதிர்ப்பலைகள் எழுந்தன. தற்காலிக ஆசிரியர் நியமனத்தை எதிர்த்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றோர் சங்கத்தைச் சேர்ந்த ஷீலா வழக்கு தொடர்ந்தார். 


இதை அடுத்து, உரிய வழிகாட்டுதலைப் பின்பற்றியே ஆசிரியர் நியமனம் நடத்தப்பட வேண்டும் என்றும் அதுவரை நியமிக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர் நியமனம் செல்லாது என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. 


8 மாதங்களுக்கு மட்டும் இவர்களைத் தற்காலிகமாக நியமிக்கலாம் எனவும் போட்டி ஏற்பட்டால், டெட் தேர்வு எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வு அடிப்படையில் பணியில் நியமிக்கவும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. 


SGT எனப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் 7,500 ரூபாயும், BT எனப்படும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் 10,000 ரூபாயும், PG முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதந்தோறும் 12,000  ரூபாயும் வழங்கப்பட உள்ளது.


இந்த வகையில் மாநிலம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களிலும் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மாநிலம் முழுவதும் 4,989 இடைநிலை ஆசிரியர்களையும் 5,154 பட்டதாரி ஆசிரியர்களையும் 3,188 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களையும் நியமிக்க பள்ளிக் கல்வித்துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 




இந்நிலையில், தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 24 மாவட்டங்களில் இதுவரை 1.5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை இடைக்கால தடை வித்துள்ளதால், உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிகாரத்திற்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் விண்ணப்பங்கள் பெறப்படாது என்று முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால், 14 மாவட்டங்களில் விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. 


13,331 பணியிடங்களைத் தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பவே, 24 மாவட்டங்களில் மட்டுமே இதுவரை 1.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். 14 மாவட்டங்களில் விண்ணப்பப் பதிவே தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண