அதிமுக பொதுக்குழு தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு மற்றும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய கூடுதல் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

ஜூன் 23ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தொடர்பாக, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் மூன்று கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றில் நீதிமன்றத்தில் தெரிவித்த 23 தீர்மானங்களை தவிர, நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றப்பட்டுள்ளதால் அதை நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக கருதி  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை தண்டிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

இவர்களை தண்டிக்கும் விதமாக மேல்முறையீடு வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்க்க அனுமதிக்க வேண்டும் எனவும், அவைத் தலைவர் அறிவித்த அடுத்த பொதுக்குழு கூட்டம் குறித்த அறிவிப்பு செல்லாது என்பதால், ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

 

இந்த கூடுதல் மனுக்கள் நீதிபதிகள் எம்.துரைசாமி, சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, சண்முகம் தொடர்ந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணைக்கும், நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கு விசாரணைக்கும் இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் நேற்று பிறப்பித்த உத்தரவு எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. அதை படித்து பார்த்த நீதிபதிகள், மேல்முறையீடு வழக்கு விசாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், அதன் அடிப்படையில் தொடரப்பட்ட மூன்று கூடுதல் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். மேலும், பிரதான வழக்குகளின் விசாரணையை ஜூலை 19ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.