சென்னையில் அமைந்துள்ள சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் (Indian Institute of Technology Madras (IIT-M) நடைபெறும் நிகழ்ச்சிகளில், தேசிய கீதம், வந்தே மாதரம் உள்ளிட்ட பாடல்களை போலவே, தமிழ்நாட்டின் மாநில வாழ்த்துப் பாடலான தமிழ்த்தாய் வாழ்த்தையும் பாட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இந்திய தொழில்நுட்ப கழகம் அமைந்துள்ளது. தமிழ்நாடு மாநிலத்தில் சென்னையில் உள்ள, ஐ.ஐ.டி. நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநிலத்தின் வாழ்த்துப்பாடல் இடம்பெறவில்லை என்பதால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில், நாட்டில் உள்ள எல்லா மொழிகளும், கலாச்சாரமும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில், இனி சென்னை ஐ.ஐ.டி.யில் தேசிய கீதத்துடன், தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்க மத்திய கல்வி அமைச்சகம் ஐ.ஐ.டி, நிர்வாகத்தை அறுவுறுத்தி உள்ளதாக, துறையின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


அந்தவகையில், இனி சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும். இதுகுறித்து அதிகாரப்பூர்வ உத்தரவு தகவலை மத்திய அரசு, சென்னை ஐ.ஐ.டி. நிர்வாகத்திற்கு விரைவில் அனுப்பி வைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்த நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படவில்லை, வாழ்த்துப்பாடல் இசைக்கப்பட்டபோது எழுந்து நிற்கவில்லை என்ற சர்ச்சை எழுந்ததையெடுத்து, தமிழ்நாடு அரசு கடந்த டிசம்பர் மாதம், மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களில் / நிறுவனங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட வேண்டும் என்றும், வாழ்த்துப்பாடல் இசைக்கப்படும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தது.


முன்னதாக, கடந்த நவம்பர் மாதம், உயர் கல்வி அமைச்சர் கே.பொன்முடி, ஐ.ஐ.டி.யின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், கல்வி நிறுவனத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மாநிலத்தின் வாழ்த்துப்பாடல் பாடப்படவில்லை என்பது மிகவும் வேதனைக்குரிய ஒன்று. இது நியாயமான நடைமுறை அல்ல. என்றும் குறிப்பிட்டிருந்தார்.


இது குறித்து கல்வி அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘ ஐ.ஐ.டி. கல்வி நிறுவனம் ஒரு தன்னாட்டி நிறுவனம் ஆகும். ஆனால்.இந்திய மொழிகள் மற்றும் கலாச்சாரம் இந்த கல்வி நிறுவனங்களில் அறிமுகம் செய்வதற்கும், ஊக்குவிப்பதற்கும் அரசின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இத்தகவல் குறித்து விரைவில், ஐ.ஐ.டி. நிர்வாகத்திற்கு எங்களிடமிருந்து கடிதம் அனுப்பப்படும்.” என்று தெரிவித்தார்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண