செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் சித்தாமூர் அடுத்துள்ள பேரம்பாக்கம் இருளர் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும், வென்னியப்பன், அவரது மனைவி சந்திரா இருவரும் மே.13  தேதி, போலி மதுபானம் (  கள்ளச்சாராயம் கலந்து தயாரிக்கப்பட்ட போலி மதுபானம் எனக்கு கூறப்படுகிறது ) குடித்துள்ளனர். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.  அதேபோல், பெருங்கரணை பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி, அவரது மனைவி அஞ்சலி, மாமியார் வசந்தா ஆகிய மூன்று பேர் கள்ளச்சாராயம் குடித்த நிலையில், சின்னத்தம்பி, வசந்தா இருவரும் உயிரிழந்தனர். சின்னத்தம்பியின் மனைவி அஞ்சலி ஆபத்தான நிலையில், மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெருங்கரணை பகுதியை சேர்ந்த மாரியப்பன் (60) என்பவர் சிகிச்சை பலனின்றி  நேற்று உயிரிழந்தார்.  



 

இந்த நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி, தமிழ்நாடு அமைச்சர் மா. சுப்பிரமணியன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர் . இந்த நிலையில், தீவிர சிகிச்சை பெற்று வந்த சின்ன கயப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சங்கர் (40) , ஜம்பு (60), முத்து (64) ஆகிய மூவர் நேற்று மாலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர்


செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த உயிரிழந்த விவகாரத்தில், தமிழக அரசு உயிரிழந்தவர்களுக்கு 10 லட்ச ரூபாயும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் நிவாரண உதவி அளித்துள்ளது. இந்தநிலையில் இது தொடர்பாக சித்தாமூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொண்டது அமாவாசை என்பவர், கள்ளச்சாரத்தை விற்பனை செய்ததாக அவரை கைது செய்தனர். அப்போது தானும் அவற்றை குறித்து விட்டதாக கூறி அரசு மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற்று வந்தார்.

 

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு நிதி உதவி வழங்கும் விழா செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்றது.  ஆவணம் ஒன்றில் குற்றம் சாட்டப்பட்ட, அமாவாசை பெயர் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அமாவாசைக்கு 50 ஆயிரம் ரூபாய் என போடப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அமாவாசைக்கு எந்தவித நிதியும் வழங்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, அமாவாசை என்பவருக்கு, எந்தவித நீதியும் அரசு சார்பில் வழங்கப்படவில்லை, அவர் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

 

தற்பொழுது சர்ச்சை ஏற்படுத்தி உள்ள இந்த விவகாரத்தில் அமாவாசை என்பவர் மீது சித்தாமூர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.