TN Rain: சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால் 2 சுரங்கப்பாதைகளை காவல்துறையினர் மூடியுள்ளனர்.
தமிழ்நாட்டில் 5 நாட்கள் மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் தமிழ்நாட்டில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால், பெரும்பாலான சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் நகரில் சில இடங்களில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
2 சுரங்கப்பாதைகள் மூடல்:
இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சென்னையில் மழை நீர் அதிகம் தேங்கியுள்ள கணேசபுரம் மற்றும் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை இரண்டும் மூடப்பட்டுள்ளது. பொதுமக்கள் போக்குவரத்துக்காக மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்
கணேசபுரம் சுரங்கபாதை வழியாக உள்ளிருந்து வெளியில் செல்லக்கூடிய வாகனங்கள் புளியந்தோப்பு நெடுஞ்சாலை, காந்தி நகர் ரவுண்டானா மற்றும் பேசின் பாலம் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. புளியந்தோப்பு சாலையில் இருந்து கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக செல்லும் வாகனங்கள் அம்பேத்கர் கல்லூரி சாலை, பெரம்பூர் சந்திப்பு, பெரம்பூர் மேம்பாலம், ஜமாலியா சாலை, ஓட்டேரி, அயனாவரம் வழியாக திருப்பி விடப்படுகின்றன.
ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை வழியாக செல்லும் வாகனங்கள். சுரங்கப்பாதை வழியாக செல்லாமல் ரங்கராஜபுரம் மேம்பாலம் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கணேசபுரம் சுரங்கப்பாதைக்கு செல்லும் சென்னை மாநகர பேருந்துகள் அனைத்தும் புளியந்தோப்பு ஹைரோடு, ஸ்ட்ராக்கன்ஸ் சாலை சந்திப்பு, ஓட்டேரி வழியாக பெரம்பூருக்கு திருப்பி விடப்படுகிறது. அதே போன்று, புளியந்தோப்பிலிருந்து கணேசபுரம் சுரங்கப்பாதை வழியாக செல்லும் பேருந்துகள் அம்பேத்கர் கல்லூரி சாலை, பெரம்பூர் நெடுஞ்சாலை சந்திப்பு வழியாக திருப்பிவிடப்பட்டு, பெரம்பூர், ஜமாலியா சாலை வழியாக ஓட்டேரி, அயனாவரம் பாலம் வழியாகச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, தமிழகத்தில் இன்று 17 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க