அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. முக்கிய எதிர்க் கட்சியான அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக மற்றும் தமாகா மட்டுமே இணைந்துள்ளன.
இந்நிலையில் இன்று , சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்பு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ;
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கட்சியின் உள்ளரங்க கூட்டம் என்பதால் உள்ளரங்கில் விவாதிக்கப்பட்டது குறித்து பொது வெளியில் பேச முடியாது.
திமுக என்கிற தமிழ்நாட்டை சீரழிக்கின்ற அராஜக ஆட்சியை மீண்டும் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா ஆசியுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி அமையும்.
ஸ்டாலினுக்கு கவலை இல்லை
செவிடன் காதில் சங்கு ஊதினால் கூட ஓரளவுக்காவது கேட்கும் , ஆனால் திமுக அரசுக்கு கேட்கவில்லை , செவிலியர்கள் ஆசிரியர்கள் அரசுத் துறை பணியாளர்களுக்கு பல்வேறு தேர்தல் வாக்குறுதியை கொடுத்து விட்டு இந்த அரசு நிறைவேற்றாமல் இருந்து வருகிறது. செவிலியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் கவலை கொள்ளவில்லை.
கள்ளச் சாராயம் விவகாரத்தில் கூட கள்ளக் குறிச்சி செல்லாத முதலமைச்சர் தேர்தல் நெருங்கும் காரணத்தால் கள்ளக் குறிச்சி செல்கிறார். தினந்தோறும் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார்.
வடமாநில தொழிலாளருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்
தமிழகத்தில் வேலை வாய்ப்புக்காக வரும் வடமாநில தொழிலாளருக்கு பாதுகாப்பு இல்லாத சூழலாக திருத்தணி விவகாரம் அமைந்தது. வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டில் தலைகுனிவு சம்பவமாக இது அமைந்துள்ளது.
தமிழகத்தில் போதை பழக்க வழக்கம் தலை விரித்து ஆடுகிறது. கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ளது. கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல் தமிழ்நாட்டில் கஞ்சா இல்லை போதை பொருட்கள் புழக்கம் இல்லை என சுகாதாரத்துறை அமைச்சரே பொய் பேசி வருகிறார். தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு பூஜ்ஜியமாக குறைந்துள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் கூறியது ஜமுக்காலத்தில் வடிகட்டிய பொய்.