அரசுப்பள்ளிகளில் படித்து, உயர்கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை வழங்கும் திட்டத்துக்கு என்னென்ன ஆவணங்கள் தேவை, எப்படி விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம். 


அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு மூவலூர்‌ ராமாமிர்தம்‌ அம்மையார்‌ உயர்கல்வி உறுதித்‌ திட்டத்தின்கீழ் மாதாமாதம் ரூ.1,000 உயர்கல்வி உறுதித்தொகை வழங்கப்பட உள்ளது. 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகள், அரசுக் கல்லூரி, அரசு உதவி பெறும் கல்லூரி, சுயநிதிக் கல்லூரிகளில் தங்களது உயர் கல்வியைத் தொடர்பவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.


உயர் கல்வித்துறை உத்தரவு


இதற்காக மாணவியர்‌ விவரங்களை இணைய தளத்தில்‌ உள்ளீடு செய்வது தொடர்பாக அறிவுறுத்தல்கள்‌ வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து உயர் கல்வி முதன்மைச்‌ செயலாளர்‌ கார்த்திகேயன்‌, தொழில்நுட்பக்‌ கல்வி இயக்கக ஆணையர்‌, கல்லூரிக்‌ கல்வி இயக்கக இயக்குநர்‌‌, நிகர்நிலைப்‌ பல்கலைக்கழகங்களின் அனைத்துப்‌ பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்‌.


தொழில்நுட்பக்‌ கல்வி, கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்வி இளநிலை பயிலும் மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 


இத்திட்டத்தினை செயல்படுத்த ஏதுவாக, https://penkalvi.tn.gov.in/ என்ற முகவரியில்‌ இணைய தளம்‌ தொடங்கப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் பதிவு செய்து, உள் நுழையலாம்.


மேற்காண்‌ இணைய தளத்தில்‌, இத்திட்டத்தில்‌ பயன்பெறும்‌ மாணவியர்களின்‌ விவரங்களை 25.06.2022 முதல்‌ 30.06.2022க்குள்‌ சிறப்பு முகாம்கள்‌ ஏற்பாடு செய்யப்பட்டு உடனடியாக அந்த இணையதளத்தில்‌ பதிவிடப்பட வேண்டும்‌.


அரசுப்‌ பள்ளிகளில் (Government Schools, Corporation Schools, Municipal Schools, Panchayat Union Schools, Adi Dravidar and Tribal Welfare Schools, Kallar Reclamation Schools, Forest Department Schools and other Schools managed by Government departments) 6 முதல்‌ 12 ஆம்‌ வகுப்பு வரை பயின்று அரசு / அரசு உதவி பெறும்‌, சுயநிதிக்‌ கல்லூரிகள்‌/ நிகர்நிலைப்‌ பல்கலைக்கழகங்களில்‌ உயர்கல்வியை தொடரும்‌ மாணவியர்‌ இத்திட்டத்தில்‌ பயன்பெறுவர்‌.


இத்திட்டத்திற்கென இளநிலை பயிலும்‌ மாணவியரிடமிருந்து அவர்களது சுய விவரங்கள்‌, வங்கிக்‌ கணக்கு விவரங்கள்‌ மற்றும்‌ பயின்ற அரசு பள்ளி விவரங்கள்‌ கோரப்படுகின்றன.


மாணவிகள்‌ எந்தெந்த ஆவண நகல்களைக் கொண்டுவர வேண்டும்?


1. ஆதார்‌ நகல்‌,
2. வங்கி கணக்குப் புத்தக நகல்‌,
3. பத்து மற்றும்‌ பன்னிரெண்டாம்‌ வகுப்பு மதிப்பெண்‌ பட்டியல்‌ நகல்‌,
4. பள்ளி மாற்றுச்‌ சான்றிதழ்‌ நகல்‌.
5.சுய விவரங்கள்‌, 
6.வங்கிக்‌ கணக்கு விவரங்கள்.




விவரங்கள்‌ சார்ந்த மாணவியர்‌ மற்றும்‌ பொறுப்பாசிரியர்கள்‌ மூலம்‌ உள்ளீடு செய்யப்பட வேண்டும்‌. சரியான விவரங்கள்‌ உள்ளீடு செய்யப்படுவதை சார்ந்த துறைத் தலைவர்கள்‌ உறுதி செய்ய வேண்டும்‌.


மாணவியர்கள்‌ பதிந்திடும்‌ தங்களின்‌ அலைபேசி எண்ணிற்கு அனுப்பப்படும்‌ என்பதால்‌, அலைபேசியைத் தவறாது கொண்டு வர வேண்டும்.‌


இத்திட்டத்தில்‌ பயன்பெறும்‌ மாணவியர்க்கு தகவல்‌ அளித்து கல்லூரிக்கு வரவழைத்து தேர்வு நடைபெற்றாலும்‌ தேர்வு முடித்த பிறகு (முற்பகல்‌ அல்லது பிற்பகல்‌) இந்த விவரங்களை விரைந்து உள்ளீடு செய்தல்‌ வேண்டும்‌.


இணைய வசதி உள்ள மாணவியர்கள்‌ தாங்களாகவே தங்களது கைபேசி அல்லது கணினி வாயிலாக மேற்காண்‌ இணைய முகவரியைப்‌ பயன்படுத்தி தங்களது விவரங்களைப்‌ பதிவேற்றம்‌ செய்து கொள்ளலாம்‌. இதனை சம்மந்தப்பட்ட கல்லூரி முதல்வர்கள்‌ உறுதி செய்து கணக்கில்‌ எடுத்துக்‌ கொள்ள வேண்டும்‌


இத்திட்டத்தினை, தொழில்நுட்பக்‌ கல்வி ஆணையர்‌ மற்றும்‌ கல்லூரிக்‌ கல்வி இயக்குநர்‌ அரசு / அரசு உதவி பெறும்‌ / சுயநிதி கல்லூரி வாரியாக கண்காணித்து உடனுக்குடன்‌ விவரங்கள்‌ பதிவிடப்படுவதை உறுதி செய்து அனைத்து மாணவியர்‌ விவரங்களும்‌ 30.6.2022-க்குள்‌ பதிவிடப்பட்டிருக்க வேண்டும்‌.


4, மேலும்‌, ஒவ்வொரு நாளும்‌ மாலை 5 மணிக்குள்‌ கல்லூரி வாரியாக பதிவிடப்பட்ட மாணவியரின்‌ எண்ணிக்கை குறித்த அறிக்கையினைத் தவறாது அரசுக்கு அனுப்ப வேண்டும்‌ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னாள் முதல்வர் காமராசர் பிறந்த நாளும் கல்வி வளர்ச்சி நாளான ஜூலை 15ஆம் தேதி, இந்தத் திட்டத்தின் வாயிலாக மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளன. அதன் அடிப்படையில் நேற்று (ஜூன் 25) முதல் விண்ணப்பங்கள் ஆன்லைன் வாயிலாகப் பெறப்பட்டன.


ஒரே நாளில் 15000 விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக உயர் கல்வித்துறை தெரிவித்தது. இத்திட்டத்தின் மூலமாக சுமார் 3 லட்சம் முதல் 3.25 லட்சம் மாணவிகள் பயன்பெறுவர் என  எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 


*


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண