அரசுப் பள்ளி ஆசிரியர்களை தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தின் மூலம் நிரப்பும் முடிவை உடனே கைவிட வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
’’அரசுப் பள்ளி ஆசிரியர்களைத் தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தின் மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு முடிவு செய்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. ஆசிரியர் பணிக்காக இரவு பகல் பாராது முயற்சித்துக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களின் அரசுப் பணி கனவினைக் கானல் நீராக்கும் திமுக அரசின் இந்த கொடுஞ்செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள 13 ஆயிரம் ஆசிரியர் பணி இடங்களுக்கு மாதம் வெறும் ரூ.7500 சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்களை நிரப்பும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பு அப்பட்டமான உழைப்புச் சுரண்டல் மட்டுமின்றி அறிவுச் சுரண்டலும் ஆகும்.
சொற்பமாகக் குறைந்த ஓய்வூதிய பலன்
ஏற்கனவே, ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு பணியாளர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை ஆட்சிக்கு வந்தவுடன் நடைமுறைப்படுத்துவேன் என்று வாக்குறுதியளித்து ஏமாற்றி அவர்களின் வாக்கினை பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்த திமுக அரசு செய்த பச்சைத் துரோகத்தால் ஆசிரியர்களது ஓய்வூதிய பலன் என்பது மிகச் சொற்பமாகக் குறைந்து போயுள்ளது.
தற்போது மேலும் 13 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற தமிழ்நாடு அரசின் புதிய அறிவிப்பால் ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் என்ற ஒன்றே இல்லாமல் போகும் சூழல் ஏற்படும். ஏற்கனவே தமிழ்நாட்டின் அனைத்து அரசுத் துறை அலுவலகங்களும் ஏறத்தாழ சரி பாதி அளவிற்கு எவ்வித அடிப்படை உரிமைகளோ, பணிப் பலன்களோ இல்லாமல் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் தற்காலிகப் பணியாளர்களைக் கொண்டு இயங்கும் அவல நிலை நிலவி வருகிறது.
பாதிக்கப்படும் மருத்துவ சேவை
இந்நிலையில், மேலும் பல ஆயிரக்கணக்கான தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் என்பது பள்ளிக் கல்வித்துறையில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். ஏற்கனவே இதேபோன்று ஒப்பந்த அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட செவிலியர்கள் தற்போது பணி நிரந்தரம் வேண்டி வீதியில் இறங்கிப் போராடி வருவதால் அரசு மருத்துமனைகளில் அவ்வப்போது மருத்துவ சேவை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே தற்காலிக ஆசிரியர் நியமனத்தால் எதிர்காலத்தில் பணி நிரந்த போராட்டங்களுக்கு வழிவகுப்பதோடு, ஆசிரியர்களது மன உளைச்சலுக்கும், மாணவர்களின் கல்விப் பாதிக்கப்படவும் முக்கியக் காரணமாகவும் அமையும்.
எவ்வகையில் நியாயம்?
மோடி தலைமையிலான பாஜக அரசு நாட்டின் பாதுகாப்பினைக் குழி தோண்டிப் புதைக்கும் விதமாக அக்னிபத் என்ற பெயரில் தற்காலிக ராணுவ வீரர்களைப் பணி நியமனம் செய்யும் எதேச்சதிகாரச் செயலில் ஈடுபட்டுள்ளதை எதிர்ப்பதாகக் கூறும் திமுக அரசு, அதைவிட அதிமுக்கியமானதும், நாளைய தலைமுறையை உருவாக்கக் கூடியதுமான பள்ளிக் கல்வித்துறையில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவித்திருப்பது எவ்வகையில் நியாயமாகும்? இத்தகைய பணி நியமனங்கள் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் முறைகேட்டில் ஈடுபடவும், ஊழல் புரியவுமே வாய்ப்பை ஏற்படுத்தும்.
ஆகவே, நாட்டின் எதிர்காலமான மாணவச் செல்வங்களுக்கு அறிவும், ஒழுக்கமும், நற்பண்பும் போதித்து அறப்பணி ஆற்றும் ஆசிரியப் பெருமக்களைத் தேர்வாணையத்தின் மூலம் நிரந்தரப் பணியாளர்களாக மட்டுமே தேர்வு செய்ய வேண்டும் எனவும், தற்காலிக ஆசிரியர் நியமன உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்’’.
இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.