எந்த அவையாக இருந்தாலும். எந்தப் பொருளாக இருந்தாலும், அதைப் பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றலோடு பேசக்கூடிய திறமையைப் பெற்றவர் பொன்முடி, அவரை அறிவுமுடி என்றுதான் முன்னாள் முதல்வர் கருணாநிதி கூறுவார் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (5.07.2022) சென்னை, மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
''பள்ளிகள், கல்லூரிகள் என்பவை படிப்பை மட்டுமல்லாமல், பாடங்களை மட்டுமல்லாமல், மாணவ மாணவியருக்கு அறிவாற்றலையும் தனித்திறமையையும் உருவாக்கும் அடிப்படையில் இயங்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவு!
இந்தக் காலத்தில் பள்ளிகளை அதிகம் திறந்து விட்டோம். கல்லூரிகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். பள்ளி, கல்லூரிச் சாலைக்குள் அனைவரும் வர வேண்டிய சூழலை உருவாக்கியிருக்கிறோம்.
பணம் அதற்கு ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற காரணத்தால், பல்வேறு உதவிகளை அரசு தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. கல்விக்காகச் செலவு செய்வதைத் தாண்டி, படிக்க வந்தால் 1000 ருபாய் என்று அரசுப் பள்ளி மாணவிகளுக்கு கொடுக்கும் என்ற ஒரு தாயுள்ளம் படைத்த அரசாக நம்முடைய தமிழ்நாடு அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
மாணவ, மாணவியர் அனைவரும் படியுங்கள்! பட்டம் பெறுங்கள்!
ஒரு பட்டத்தோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள்! எந்தப் பட்டமாக இருந்தாலும், அதில் உள்ள உயர்ந்த நிலையை அடையுங்கள்!
இங்கு மேடையில் அமர்ந்திருக்கும் தமிழ்நாட்டின் உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் முனைவர் பொன்முடி அவர்கள் எத்தனை பட்டங்கள் வாங்கி இருக்கிறார் தெரியுமா?
சட்டப் படிப்பு
எம்.ஏ. வரலாறு
எம்.ஏ. அரசியல் அறிவியல்
எம்.ஏ. பொதுத்துறை நிர்வாகம் ஆக இப்படி பல பட்டங்களைப் பெற்றவர்.
அது மட்டுமல்ல, அதைத் தாண்டி. அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். கலைஞர் கூட அடிக்கடி அவரை சொல்கிறபோது பொன்முடி என்று சொல்ல மாட்டார். அறிவுமுடி என்றுதான் கூப்பிடுவார். பாசத்தோடு அந்த அளவுக்கு ஆற்றலைப் பெற்றவர். எந்த அவையாக இருந்தாலும். எந்தப் பொருளாக இருந்தாலும், அதைப் பற்றி தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆற்றலோடு பேசக்கூடிய திறமையைப் பெற்றவர் பொன்முடி. கல்லூரிப் பேராசிரியராக இருந்து, இன்று பல்கலைக்கழகங்களின் இணைவேந்தராக இருக்கிறார் என்றால், இதற்குக் காரணம் அவரது கல்வித் திறனும் அறிவாற்றலும்தான்.
அத்தகையஆற்றலைப் பெற்றவர்களாக மாணவ், மாணவியர்கள் இருக்கவேண்டும். கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்கள். இந்தச் சிறப்பு கற்றோருக்கு மட்டும்தான் உண்டு, மற்றோருக்கு இல்லை என்பதை உணருங்கள். குறிப்பாக, பெண்கள் மிகுதியாகக் கல்வி பெற வேண்டும். கல்வி இல்லாப் பெண்கள் களர் நிலம்' என்று பாடினார் பாவேந்தர் அவர்கள்''.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்