வங்கக்கடலில் உருவாகி உள்ள புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருக்கிறார்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பெரும் மழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெரும் மழை பெயது வருகிறது. மிக்ஜாம் புயலில் சென்னை மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்க சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் 12 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். முதலமைச்சர் தலைமையில் இன்று (1.12.2023) வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்தும், வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னத்தின் தாக்கத்தை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், வேலூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், கடந்த 27-ம் தேதி அன்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. இதனால் 3-12-2023, 4-12-2023 ஆகிய தேதிகளில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள பின்வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சம்பந்தப்பட துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும்.
பாதிப்பிற்குள்ளாகக்கூடிய மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை வழங்கி, அவர்களை நிவாரண மையங்களில் தங்க வைக்க வேண்டும். நிவாரண முகாம்களில் உணவு, பாதுகாப்பான குடிநீர், மின்சார வசதி உட்பட தேவையான அனைத்து அடிப்படை வசதிகள் உள்ளதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். மழை, வெள்ள காலங்களில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளை தடுக்க மின்சார வாரியம் கட்டாயம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். புயலின் சீற்றம் காரணமாக மரங்கள் வீழும் என்ற காரணத்தால், புயலின் போது விழக்கூடிய மரங்களை உடனடியாக அகற்றுவதற்கு குழுக்கள் போதிய உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் அவசர சிகிச்சைப் பிரிவு செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள், பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளில் பல்துறை மண்டல குழுக்களை முன்கூட்டியே நிலைநிறுத்த வேண்டும். பாதிப்பிற்குள்ளாகும் மக்களுக்கு உணவு வழங்கிட உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கனமழையின் போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை நாம் காண்கிறோம். காவல் துறை இதில் சிறப்புக் கவனம் செலுத்தி, அதிக அளவில் போக்குவரத்து காவலர்களை ஈடுபடுத்தி, போக்குவரத்து நெரிசலை விரைந்து சரி செய்வதை உறுதி செய்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
மழைக்கால நிவாரணப் பணிகளை மேற்கொள்ள குறிப்பான தேவைகளை உடனடியாக அந்தந்த மாவட்டத்தின் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் துறைச் செயலாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அதனை அரசு உங்களுக்கு செய்து தரத் தயாராக உள்ளது என்பதைத் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.