ஏன் இப்படி பைக் ஓட்டுகிறீங்க ?
திருவள்ளூரை அடுத்த ஒண்டிக்குப்பம் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (32). இவரின் நண்பர்கள் கேசவமூர்த்தி, சுகுமார். இவர்கள் மூன்று பேரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள கோனே நீர்வீழ்ச்சிக்கு சென்றிருந்தனர். பின்னர் மூன்று பேரும் பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
திருவள்ளூர் அருகே ஒண்டிக்குப்பம் பகுதியில் வந்த போது அங்கு அதே பகுதியைச் சேர்ந்த நீலகண்டன், ஜவஹர், ஜோதிஸ், வினோத் ஆகிய 4 பேர் இரண்டு பைக்குகளில் வந்திருக்கிறார்கள். அப்போது பார்த்திபன், அவரின் நண்பர்கள் வந்த பைக்குகளில் நீலகண்டன் அவரின் நண்பர்கள் வந்த பைக்குகள் மோதுவதைப் போல சென்றிருக்கின்றன. உடனே பார்த்திபனும் அவரின் நண்பர்கள் ஏன் இப்படி மோதுவது போல பைக்குகளை ஓட்டுகிறீர்கள், போதையில் இருக்கிறீர்களா என நீலகண்டனுடன் வந்தவர்களிடம் கேட்டிருக்கிறார்கள்.
அதைக் கேட்டதும் நீலகண்டனும் அவரோடு வந்த மூன்று பேரும் சேர்ந்து பார்த்திபன், சுகுமார், கேசவமூர்த்தி ஆகியோரை சரமாரியாக தாக்கியிருக்கிறார்கள். அதை பார்த்திபன் தரப்பு தடுத்திருக்கிறது. அதனால் அந்த இடமே போர்களமாக மாறியது.
கற்களை வீசி பலத்த காயம்
பார்த்திபன், சுகுமார், கேசவமூர்த்தி ஆகியோர் மீது நீலகண்டனுடன் வந்தவர்கள் சரமாரியாக கற்களை வீசியிருக்கிறார்கள். இதில் பார்த்திபன், சுகுமார், கேசவமூர்த்தி ஆகியோருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. தலையில் பலத்த காயமடைந்த பார்த்திபன் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார்.
மற்ற இருவரும் காயங்களுடன் உயிருக்குப் போராடியுள்ளனர். இதையடுத்து நீலகண்டனுடன் வந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த கேசவமூர்த்தி, சுகுமார் ஆகியோரின் அலறல் சத்தம் கேட்டு ஓண்டிக்குப்பம் பகுதி மக்கள் அங்கு வந்தனர்.
பின்னர் அவர்கள் மணவாளநகர் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்ததோடு மூன்று பேரையும் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். பார்த்திபனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மற்ற இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் சுகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கேசவமூர்த்தி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த இரட்டைக் கொலை குறித்து வழக்குப் பதிவு செய்த மணவாள நகர் போலீஸார், நீலகண்டன் உள்பட 4 இளைஞர்களைத் தேடி வந்தனர்.
இது குறித்து மணவாளநகர் போலீஸார் கூறுகையில் ;
கொலை செய்யப்பட்ட பார்த்திபன், வங்கியில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருக்கு மனைவி, குழந்தை உள்ளது. பார்த்திபனின் நண்பனான சுகுமார், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரின் மனைவி கர்ப்பமாக உள்ளார். எங்களின் முதற்கட்ட விசாரணையில் கஞ்சா போதை காரணமாக இந்தக் கொலைகள் நடந்திருக்கின்றன. இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்வது யாரென்று விசாரித்து வருகிறோம் என்றனர்.