குமரிக்கடல் மற்றும் அதையொட்டியுள்ள இலங்கை கடற்கரை பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழ்நாட்டிலும் புதுவையிலும் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், சென்னை உள்பட தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், கடலோர மாவட்டங்களை ஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்தது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் நாளை ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அரியலூர், திருச்சி, கரூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள், காரகை்கால் பகுதிகளிலும் நாளை கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளது.
வடகிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக இன்று குமரி, தென்மேற்கு வங்கக்கடல், தென்தமிழக கடற்கரை பகுதிகளுக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். நேற்று நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையால் பல மாவட்டங்களிலும் சாலைகளில் தண்ணீர் வெள்ளபோல சூழ்ந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பணிக்கு செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையில் விட்டுவிட்டு பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. இதனால், சென்னைவாசிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்தநிலையில், வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவித்திருந்தது.
இதையடுத்து, தற்போது தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் கனமழை குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், சென்னையில் ஒரு மாதத்தில் 1000 மி.மீ.,அளவை கடப்பது இது 4-வது முறையாகவும், கடந்த 200 ஆண்டுகளில் நவம்பர் மாதத்தில் மட்டும் 1000 மி.மீ.,அளவை கடப்பது 3வது முறையாகவும் பதிவாகியுள்ளது.
1088 mm - நவம்பர் 1918
1078 mm - அக்டோபர் 2005
1049 mm - நவம்பர் 2015
1003 mm - நவம்பர் 2021 (27 நவம்பர் - 7.30 pm நிலவரப்படி) இது தான் இந்த ஆண்டுக்கான தீவிர கனமழையின் நிலை என்றும் தெரிவித்துள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்