ஆவடியைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ்-சௌபாக்கியா இவர்களின் மூத்த மகள் 9 வயது சிறுமி டானியா ஆறரை வருடங்களாக அரிய வகை முக சிதைவு நோயால் அவதிப்பட்டு வந்தார். தமிழக முதல்வரின் உத்தரவுக்கிணங்க ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சவீதா மருத்துவமனையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி அனுமதிக்கப்பட்டு முக சீரமைப்பு அறுவை சிகிச்சை ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நடைபெற்று முடிந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட சிறுமி டானியாவை தமிழக முதல்வர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.



 

அதனைத் தொடர்ந்து 25 நாட்களுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 12ஆம் தேதி வீடு திரும்பினார். இந்நிலையில் சிறுமி டானியா மீண்டும் ஒரு அறுவை சிகிச்சைக்காக தற்போது ஸ்ரீபெரும்புதூர் தண்டலம் பகுதியில் சவிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சிறுமி டானியாவிற்கு முக சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்த பக்கமுள்ள கண் மூடுவதற்கு சிரமப்படுவதாலும், சாப்பிடுவதற்கு வாய் திறக்க அவதிப்படுவதாலும் இந்த அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. தற்போது  சிறுமி டானியா சில நாட்கள்  மருத்துவரின் முழு கண்காணிப்பில் இருந்து முழு உடல் பரிசோதனைக்கு பிறகு முக சீரமைப்பு செய்யப்பட்ட பகுதியில் மீண்டும் அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



கண்ணீர் மல்க பேட்டி..


திருவள்ளூர் மாவட்டம் ஆவடி வீராபுரம் ஸ்ரீவாரி நகரைச் சேர்ந்த ஸ்டீபன் ராஜ் - செளபாக்யா தம்பதியினரின் மூத்த மகள் டானியா. 9 வயதாகும் டானியா வீராபுரம் அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். அரிய வகை முகச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட டானியாவிற்கு முகத்தின் ஒரு பக்கம் கன்னம் முதல் வாய் வரை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் பள்ளியில் உள்ள சக மாணவிகள் மட்டுமின்றி ஆசிரியர்கள் கூட டானியாவை புறக்கணிப்பதாக அவர்களது பெற்றோர் கண்ணீர் மல்க பேட்டியளித்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த செய்தி வெளியான நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறுமிக்கு தேவையான அனைத்து உதவிகளும் தமிழக அரசு செய்து தரப்படும் எனக் கூறியிருந்தார்.




முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் சிறுமியின் வீட்டிற்குச் சென்று மருத்துவ காப்பீடு அட்டை, குடும்ப நல அட்டை போன்றவற்றை வழங்கியதோடு, சிகிச்சைக்கான ஏற்பாடுகள் குறித்தும் விளக்கினார். கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் தேதி திருப்பெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் உள்ள சவிதா மருத்துவமனையில் முக அறுவை சிகிச்சைக்காக சிறுமி அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர், ஆகஸ்ட் 23ம் தேதி அதி நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 பேர் கொண்ட மருத்துவ குழு, சிறுமி டானியாவிற்கு 8 மணி நேர அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர். 5 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு கண்காணிப்பட்ட சிறுமி இயல்பு நிலைக்கு திரும்பியதை அடுத்து கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் டானியாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.


டானியாவின் முகச்சீரமைப்பு சிகிச்சைக்கு உதவியதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சிறுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். இதனையடுத்து, 15 நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த டானியா, இன்று காலை ஆம்புலன்ஸ் மூலமாக வீடு திரும்பினார். பால்வளத்துறை அமைச்சர் நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.


வீடு திரும்பும் முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த டானியா கூறியதாவது, “உதவி கோரியதும் எனது முகச்சிதைவு சிகிச்சைக்காக உதவி புரிந்த முதல்வர் அய்யாவிற்கு நன்றி. இப்ப என்னோட கன்னம் சரியாகிடுச்சி, சிகிச்சை முடிந்து வீடு திரும்புவது மகிழ்ச்சியாக உள்ளது. இனிமேல் நான் ஒழுங்கா ஸ்கூலுக்கு போவேன். நன்றாக படித்து முதலமைச்சரின் பெயரைக் காப்பாற்றுவேன்,” எனத் தெரிவித்தார்.