மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த 2 நாட்களுக்கு மேலாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடும் பால் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. நேற்று அதிகாலை முதலே கடை கடையாக பால் பாக்கெட்களை வாங்க மக்கள் படையெடுத்து சென்று, கியூக்களில் நின்று கடைசிவரை கிடைக்காமல் திரும்பி வந்த நிலைமைகளும் இருந்தது. அரை லிட்டர் ஆவின் பால் பாக்கெட் விலை அன்றாட நாட்களில் ரூ. 23 விற்கப்பட்டு வருகிறது. ஆனால், ஒரு சில கடைகளில் அரை லிட்டர் ஆவின் பால் பாக்கெட் விலை ரூ. 50 க்கு விற்ற கொடுமைகளும் நடந்தது. சுமார் 2 மடங்கு அதிக விலை விற்று இந்த இக்கட்டான வெள்ளம் பாதித்த பகுதிகளில் பணத்தை சம்பாதிக்கும் கொடுமையும் அரங்கேறியது.
நேற்று முதல் சென்னை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் தண்ணீர் நிரம்பி இருக்கும் பகுதிகளில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. ஒரு சில பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கைக்கு திரும்பினாலும், இன்னும் சில பகுதிகளில் கழுத்து அளவு தண்ணீரில் மக்கள் தத்தளித்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது நிதர்சனம்.
இன்றளவும் பால் பாக்கெட் தட்டுபாடு:
இரண்டாவது நாளான இன்றும் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களில் பால் தட்டுபாடு உள்ளதாக பால் முகவர்கள் சங்க தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “மிக்ஜாம் புயல் காரணமாக சூழ்ந்திருக்கும் மழைநீரால் அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை இயக்க முடியாத சூழலில் சுமார் 5லட்சம் லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தேங்கியிருக்கும் மழைநீரால் பால் பண்ணைக்கு பணிக்கு வர வேண்டிய ஆட்கள் குறைவாக வந்த காரணத்தால் மாதவரம் பால் பண்ணையில் இருந்து மாதாந்திர அட்டைதாரர்களுக்கு மட்டும் பால் வழங்கி விட்டு, பால் முகவர்களுக்கு மொத்த விநியோகஸ்தர்கள் மூலம் விநியோகம் செய்ய வேண்டிய ஆவின் பால் பாக்கெட்டுகள் உற்பத்தி மற்றும் விநியோகம் இன்று நிறுத்தப்பட்டிருக்கிறது.
மேலும் சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் இருந்தும் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு மட்டும் வழங்கி விட்டு பால் முகவர்களுக்கு மொத்த விநியோகஸ்தர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட வேண்டிய பாலில் ஆவின் டிலைட் பால் மட்டும் சொற்ப இதனால் சென்னை மாநகரில் இரண்டாவது நாளாக ஆவின் பால் விநியோகம் முடங்கியிருக்கிறது. இதன் காரணமாக சென்னையில் இன்றும் பாலுக்கு கடுமையாக தட்டுப்பாடு ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் இதுகுறித்து ஆவின் பால் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, “சென்னை அம்பத்தூர்,மாதவரம், சோழிங்கநல்லூர் பால் பண்ணைகளில் பால் பேக்கிங் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. மெட்ரோ மற்றும் அனைத்து இடங்களிலும் பால் விநியோகம் சீராக இருக்கிறது.
வெளி மாவட்டங்களில் இருந்தும் பால் பாக்கெட்டுகள் சென்னை மாநகரத்துக்கு கொண்டுவரப்பட்டு முழு வீச்சில் விநியோகம் செய்யப்படுகிறது. அனைத்து பொது மக்களுக்கும் பால் வினியோகம் சீரான முறையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.