கொரோனா தொற்றானது உலகம் முழுவதும் பரவத்தொடங்கி கிட்ட தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன, இந்த கொரோனா காரணமாக உலகில் உள்ள பல மக்களும் தங்களது குடும்பங்களை இழந்தும், குழந்தை தங்கள் பெற்றோர்களையும் இழந்து தவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி  மக்கள் பலர் தங்களது வாழ்வாதாரங்களையே இழந்து உள்ளனர். இதே போல் கடலூரை சேர்ந்த புகைப்பட கலைஞர் சிவசங்கர் கொரோனா தொற்று காரணமாக வேலை இழந்ததால் தற்பொழுது குடும்பத்தோடு சேர்ந்து இடியாப்பம் விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடலூரில் உள்ள புதுப்பாளையத்தில் கலை ஸ்டுடியோ எனும் கடை ஒன்று வைத்து நடத்தி வந்தார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு அமலானதால் மக்கள் நடமாட்டம் பெரிதளவில் இல்லை அதுமட்டும் இன்றி திருமணங்களுக்கும் மற்ற விசேஷங்களுக்கும் மக்கள் கூட அனுமதி தர மறுக்கப்பட்டது. அதனால் அவருக்கு சரியாக எப்பொழுதும் வருவது போல் வேலை வராத காரணத்தினால் மிகவும் மன கஷ்டத்திற்கு ஆளானார். குடும்பத்தினை சரியாக பார்த்துக்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டது அவரது மனைவியும் வேலைக்கு செல்லாததால் அவரின் வருமானம் தான் குடும்பத்திற்கு ஒரே வருமானமாக இருந்து வந்தது.



இந்நிலையில் சிவசங்கர் வேலை இல்லாமல் வேதனைக்கு உள்ளான நேரத்தில் தான் அவரது மனைவிக்கு இடியாப்பம் மற்றும் நாட்டுப்புற உணவுகள் சமைப்பதில் ஆர்வம் உள்ளது என அவரின் கணவரிடம் கூறியுள்ளார். பின் அந்த யோசனையினை கேட்ட சிவசங்கரும்  தற்பொழுது இடியாப்பம் செய்து விற்று வருகின்றனர். இதுகுறித்து அவர் கூறுகையில், எங்கள் வீட்டில் என் குடும்பம் மற்றும் என் சகோதரரின் குடும்பம் மற்றும் என் தாய் ஆகிரியோர் வசித்து வருகிறோம். நான் மற்றும் எனது சகோதரர் இருவரும் கிட்ட தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக புதுப்பாளையம் பகுதியில் ஸ்டுடியோ வைத்து நடத்தி வருகிறோம் எங்கள் மொத்த குடும்பத்திற்கு அது ஒன்று தான் வருமானம். ஆனால் கடந்த மார்ச் மாதம் கொரோனா காரணமாக முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதற்கு முன்பு வரை நன்றாக சென்றுகொண்டிருந்த தொழில் ஊரடங்கு அறிவித்த பின் படிப்படியாக குறைய தொடங்கியது, அதன் பின் முதல் ஊரடங்கு முடிந்ததும் தொழிலானது மீண்டும் சீராக தொடங்கியது.



ஆனால் அது நீடிக்கவில்லை, மீண்டும் கொரோனா பரவல் காரணமாக மீண்டும் இரண்டாவது முறை ஊரடங்கு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. அதன் பின் வந்திருந்த ஆர்டர்களும் திரும்பி போக ஆரம்பித்துவிட்டன. இரண்டாவது ஊரடங்கில் கட்டுப்பாடுகள் அதிகம் இருந்தால் இந்த சூழல் ஏற்ப்பட்டது. அப்பொழுது வீட்டு செலவிற்கு  கூட பணம் இல்லாத சூழல் ஏற்பட்டது நான் மிகவும் மன கஷ்டத்திற்கு ஆளானேன் என்ன செய்வதென்றே தெரியாது முழித்த சூழலில் என் மனைவி லக்ஷ்மி தான் முதன் முறையாக, இப்படியே இருந்தால் என்ன ஆவது எனக்கூறி இந்த பாரம்பரிய உணவுகளை சமைத்து விற்கலாம் என யோசனை கூறினார். பின் நாங்கள் வீட்டிலேயே அதனை செய்து பார்த்தோம் அது நன்றாக எங்களுக்கு பிடித்தவாறு வந்ததால் அதனை தொடர ஆரம்பித்தோம்.



நாங்கள் ஆரம்பிக்கும் பொழுது இரண்டாயிரம் ரூபாய் முதல் போட்டு முதலில் வெறும் இடியாப்பம் சுட்டு விற்க ஆரம்பித்தோம், அதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது பின் வெண்ணெய் புட்டு, கருப்பு இட்லி, என நமது பாரம்பரிய உணவுகளை சமைத்து விற்க ஆரம்பித்தோம். எங்களுக்கு உணவுகளை செய்ய சரியான இட வசதி இல்லாததால் நாங்கள் எங்கள் வீட்டிலேயே சமைத்து எங்களது ஸ்டுடியோவில் தான் விற்று வருகிறோம். முதலில் மனமுடைந்த  எனக்கு என் மனைவி அளித்த உத்வேகம் எங்களை இன்று இந்த நிலைமைக்கு உயர்த்தி உள்ளது. இப்பொழுது நாங்கள் கடந்த ஆறு மாத காலங்களாக இந்த இடியாப்பம் விற்று தான் எங்கள் குடும்பத்தை நடத்தி வருகிறோம். இப்பொழுது இடியாப்பம் விற்று சேர்த்து வைத்த பணத்தில் புதிதாக இடியாப்பத்திற்கு மாவு பிழியும் தானியங்கி எந்திரத்தை புதிதாக வாங்கி உள்ளோம். தற்பொழுது மீண்டும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் சற்று எங்களுக்கு வேலை திரும்ப வர ஆரம்பித்துள்ளது ஆனாலும் நாங்கள் இடியாப்பம் விற்பனையினை நிறத்தவில்லை அதுவும் தொடர்ந்து கொண்டே தான் உள்ளது.