வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் என். சுப்ரமணியன் மீதான புகாரை இரண்டு வாரங்களில் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என சேலம் மாநகர காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

2011-2015ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த சுப்ரமணியன் வேலை வாங்கி தருவதாக கூறி 65 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக கூறி அதுதொடபான புகாரில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய சேலம் ஜான்சன் பேட்டையை சேர்ந்த கே. முனுசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

 

அவரது மனுவில், வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி அளிக்காமல் அலைகழித்ததாகவும், சேலம் மாநகர காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். பணத்தை கேட்டபோது அடியாட்களை வைத்து முன்னாள் அமைச்சர் சுப்ரமணியன் மிரட்டியதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

 

சுப்ரமணியன் மீதான புகாரை முறையாக விசாரிக்கவும், வழக்குப் பதிவு செய்து வழக்கை விரைவாக விசாரித்து முடிக்கவும் உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், முன்னாள் அமைச்சர் ந.சுப்ரமணியனுக்கு எதிராக மனுதாரர் அளித்த புகாரை இரண்டு வாரங்களில் விசாரித்து முடிவு எடுக்க வேண்டுமென சேலம் மாநகர காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.



 

அன்னிய மரங்களை அகற்ற உத்தரவு

 


தமிழக வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்ற போர்க்கால அடிப்படையில் தீவிரம் காட்டி நடவடிக்கை எடுக்காவிட்டால்,  தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வனத்தை அழித்து விடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

தமிழகத்தில் வனப்பகுதிகளில் பரவும் அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கில், அன்னிய மரங்களை அகற்ற ஏன் தீவிரம் காட்டவில்லை எனவும்,  தனியார் நிறுவனங்களின் சமூக பாதுகாப்பு நிதியை ஏன் பயன்படுத்தக் கூடாது எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அன்னிய மரங்களை அகற்ற தமிழ்நாடு காகித நிறுவனத்தை நியமிப்பது தொடர்பான உத்தரவை பிறப்பிக்க அக்டோபர் 11ம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்படும் என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.