காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவது தொடர்பான வழக்கில் அக்டோபர் 11ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

 

ஆனால் மாநிலம் முழுவதும் அமல்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளதாக தமிழக அரசு விளக்கமளித்திருந்தது. இருப்பினும், காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கும்படி வழக்கறிஞர்களை உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருந்தது.

 

இந்த பின்னணியில், இதுகுறித்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில்  மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் எப்படி அமல்படுத்தலாம் என்பது குறித்த வழக்கறிஞர்களின் ஆலோசனைகளை பெற்றுள்ளதாகவும், அவற்றை பரிசீலித்து அறிக்கை அளிப்பதாகவும் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

அதை ஏற்று, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் அக்டோபர் 11ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.



 

கோவை: மற்றொரு வழக்கு

 


கோவை மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கற்சூளைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

 

கோவை மாவட்டத்தில் யானைகள் வழித்தடமான தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் செயல்பட்டு வந்த 134 செங்கற் சூளைகள் உயர்நீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்டன. இந்த செங்கற்சூளைகள்,  ஆனைகட்டி, பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட யானைகள் வழித்தடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அரசின் அனுமதியின்றி செயல்படும் இந்த செங்கற்சூளைகளை  மூட உத்தரவிட வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, ஆனைகட்டி, பெரியநாயக்கன் பாளையம் போன்ற யானைகள் வழித்தடத்தில் செயல்படும் செங்கற்சூளைகள் அரசு அனுமதி பெற்று செயல்படுகின்றனவா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும், செங்கற்சூளைகள் மூடப்பட்ட தடாகம் பகுதிகளில் மண் எடுத்ததால் ஏற்பட்ட குழிகளை மூடவும் உத்தரவிட்டது.

 

அப்போது குறிக்கிட்ட தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், கோவையில் யானைகள் வழித்தடத்தில் உள்ள செங்கற்சூளைகள் மூட உத்தரவிடப்படும் என தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 17ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.