மனைவி மீது சந்தேகம்

Continues below advertisement

மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டம் பெடியா காவல் எல்லைக்குட்பட்ட பக்காவா கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில். இவரது மனைவி சம்பாபாய் (வயது 30). இந்தத் தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். சுனில் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த புதன் கிழமை இரவு தம்பதியினரிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சுனில், தனது மனைவி சம்பாபாயை சரமாரியாகக் கைகளாலும், குச்சியாலும் தாக்கியுள்ளார். அந்தச் சமயத்தில், சம்பாபாய் தனது 6 மாதக் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருந்துள்ளார்.

Continues below advertisement

குழந்தையின் மூச்சு குழாயில் சிக்கிய தாய்ப்பால்

சுனில் தாக்கிய வேகத்தில் நிலை தடுமாறிய சம்பாபாய் கதவோரம் விழுந்து மயக்கமடைந்துள்ளார். பின்னர் அவர் உயிரிழந்தார். தாய் தாக்கப்பட்ட அதிர்ச்சியில், பால் குடித்துக் கொண்டிருந்த குழந்தையின் மூச்சுக் குழாயில் பால் ஏறியதால் , அந்தக் குழந்தையும் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தது.

இந்தக் கொடூரச் சம்பவத்தை தம்பதியினரின் மற்ற இரண்டு குழந்தைகளும் நேரில் பார்த்து அழுதுள்ளனர். ஆனால், மனைவி மயக்கமடைந்து விட்டதாகக் கருதிய சுனில், அமைதியாகத் தூங்கச் சென்றுள்ளார். வீட்டில் தாய் மற்றும் குழந்தையின் சடலங்கள் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் அளித்தனர்.

கொலை செய்ததை ஒப்பு கொண்ட கணவன்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ரவீந்திர வர்மா மற்றும் தடயவியல் நிபுணர்கள் உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். சடலங்களுக்கு அருகிலேயே அமர்ந்திருந்த சுனிலை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், அவரே கொலையைச் செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து சுனிலை கைது செய்த போலீசார், அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர். உயிரிழந்த தாய் மற்றும் குழந்தையின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. சந்தேகத்தால் ஒரு குடும்பமே சிதைந்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.