23.55 லட்சம் விவசாய மின் இணைப்புகள்

தமிழகத்தில் மின்வாரியம் சார்பில் விவசாயிகளுக்கு இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுக்க ,  23.55 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் வீடு, கடை, வணிக நிறுவனங்கள் என, 3.10 லட்சத்திற்கும் அதிகமான மின் இணைப்புகள் , 50,000 - க்கும் மேற்பட்ட விவசாய இணைப்புகளும் தரப்பட்டு உள்ளன.

தற்போது மாவட்டத்தில் வீடுகள், விவசாயம் , தொழிற்சாலை , வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளுக்கும் , ஒரே மின் வழித்தடத்தில் , மின் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். கோடைக் காலத்தில் குறைந்த மின்னழுத்தம் காரணமாக , விவசாய நிலங்களுக்கு நீர்ப் பாய்ச்ச சிரமம் உள்ளதால் , தனி வழித்தடம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து தனி வழித்தடம் அமைக்கும் பணிகளை அரசு முடுக்கி விட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது ; 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் பல மணி நேரம் இரு முனை மின் வினியோகம் செய்வதால், குறைந்த மின்னழுத்த பிரச்னை ஏற்பட்டு , அவ்வழித் தடங்களில் உள்ள வீடுகள் , அலுவலகங்கள் , தொழிற் கூடங்களில் மின் சாதனங்கள் , இயந்திரங்கள் பழுதாகின்றன. இதற்கு தீர்வு காணும் வகையில் விவசாயத்துக்கு செல்லும் மும்முனை மின் சாரத்திலும் , குடியிருப்பு, அலுவலகம் உள்ளிட்ட பயன்பாட்டிற்கான மின் சாரத்திலும் ஏற்றத்தாழ்வுகள் இன்றி, ஒரே மாதிரி மின் வினியோகம் செய்ய வேண்டும்.

விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் , 24 மணி நேரமும் கிடைக்க வேண்டும். அதை மும்முனையாக வினியோகிக்க வேண்டும். மத்திய அரசின் மறுசீரமைப்பு மின் வினியோக திட்டத்தின் கீழ் தனி வழித்தட பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கூறுகின்றனர்.