சென்னை கொளத்தூர் பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் - பாரதி என்ற வயதான தம்பதியினர் பூச்சிக் கொல்லி மருந்தை அருந்தி நேற்று தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது மகன் தினேஷ் மற்றும் மகள் பாக்கிய லட்சுமி சம்பவ இடத்தில் இருந்து மாயமான நிலையில், ஈ.சி.ஆர் பகுதியில் அவ்விருவரும் பூச்சிக் கொல்லி மருந்து அருந்தி மயக்க நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். முதலில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையிலும் பின்னர் அங்கிருந்து மாற்றப்பட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனை யிலும் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வயதான தம்பதியரின் தற்கொலை விவகாரம் தொடர்பாக கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த தினேஷிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.



 

குறிப்பாக கடந்த டிசம்பர் 8 ஆம் தேதி பாண்டிச்சேரி முன்னாள் அமைச்சரின் உறவினர் உட்பட 3 பேரிடம் குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி 6.30 கோடி ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் பாலாஜி, துளசிதாஸ் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டிருந்த  நிலையில், இவ்விவகாரத்தில் பாலாஜியுடன் தொடர்பிருப்பதாகக் கூறி நேற்று முன் தினம் தினேஷை அழைத்து பெரியமேடு போலீசார் விசாரணை நடத்தியது தெரியவந்தது. மேலும், தினேஷ் தனக்குத் தெரிந்த நண்பர்கள் உறவினர்களிடம் குறைந்த விலைக்கு தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கி பாலாஜியிடம் கொடுத்ததும், அதை அவர் ஏமாற்றியதால் பணம் கொடுத்தவர்கள் தினேஷ் மற்றும் அவர்களது குடும்பத்தாரிடம் பணத் தைத் திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.



 

இந்நிலையில் பெரியமேடு போலீசார் தினேஷை விசாரணைக்கு அழைத்ததால், மனமுடைந்து தினேஷின் தாய், தந்தையர் பூச்சி மருந்து அருந்தி தற்கொலை செய்து கொண்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தினேஷ் வீட்டில் வந்து பார்க்கும் போது தாய் தந்தையர் இறந்து கிடந்ததாகவும், அதனால் பயந்து வீட்டை விட்டு வெளியேறி ஈ.சி.ஆர் பகுதிக்குச் சென்று தானும், தன் சகோதரி பாக்கியலட்சுமி என்பவரும் பூச்சிக் கொல்லி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்ற தாகவும், இந்த மோசடி வழக்கில் தன்னை சிக்க வைக்க பல்வேறு சதித் திட்டம் நடைபெறுவதாகவும் குற்றஞ்சாட்டி தினேஷ் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். தினேஷ் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் வயதான தம்பதியினர் உயிரிழந்த விவகாரத்தில் தற்கொலைக்கான காரணம் வெளியாகி வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தாய் தந்தையர் பூச்சி கொல்லி மருந்து அருந்தி உயிரிழந்ததை பார்த்து விட்டு , தினேஷ் மற்றும் சகோதரி பாக்கியலட்சுமி ஆகிய இருவரும் யாருக்கும் சொல்லாமல் வீட்டை விட்டு மாயாமாகி தற்கொலைக்கு முயன்றது ஏன்? என்பது குறித்தும், தங்க மோசடி வழக்கில் சிக்கியதால் தப்பிக்கும் நாடகமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.