சென்னையில் கொரோனா தொற்று தீவிரமடைந்தபோது தற்காலிகமாக மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு மாத சம்பளம் 70 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் சென்னையில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வருகிறார்கள்.
கொரோனா பணியில் ஒருவாரம் தொடர்ச்சியாக ஈடுபடும் மருத்துவர்கள் தனியார் தங்கும் விடுதிகளில் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டார்கள். அரசின் சார்பில் அவர்களுக்கு தங்கும் வசதி, உணவு போன்றவை வழங்கப்பட்டது. அந்த வகையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பணிபுரிந்த 2 பெண் மருத்துவர்கள் தியாகராய நகரில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தங்கி இருந்தனர். அவர்களை உடன் பணிபுரிந்த மருத்துவர்கள் வெற்றிச்செல்வன் (35), மோகன்ராஜ் (28) ஆகியோர் பாலியல் சீண்டல் செய்ததாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதில் ஒரு பெண் மருத்துவரை வன்புணர்வு செய்ததாகவும், மற்றொருவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதும் தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலிசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது. இதனை அடுத்து இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், மருத்துவர்கள் வெற்றிச்செல்வனும், மோகன்ராஜும் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து மருத்துவத்துறை மூலமும் கைது செய்யப்பட்ட இரண்டு மருத்துவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவர் துறை இயக்குநர் நாராயணபாபுவின் உத்தரவின் பெரில் இருவரும் பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அவர் கூறும் போது, பெண் மருத்துவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட மருத்துவர்கள் இருவரும் ஒப்பந்த அடிப்படையில் கொரோனா காலத்தில் நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததை அடுத்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார். ராஜீவ்காந்தி மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 பெண் மருத்துவர்களும் திருமணம் ஆகாதவர்கள். அவர்களும் ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்க்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவர்களே இவ்வாறு செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்