அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள்

Continues below advertisement

தமிழகத்தில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட கட்டடங்கள் கட்ட நகர், ஊரமைப்பு சட்டப்படி பொது கட்டட விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிகளுக்கு உட்பட்டு தான் ஒவ்வொரு கட்டடமும் கட்டப்பட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை போன்ற நகரங்களில் தனி வீடுகள் குறைந்து அடுக்குமாடி குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. இதனால் புதிய வீடு வாங்க வேண்டும் என்று வரும் மக்கள் அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை தவிர்க்க முடியாத நிலை உள்ளது.

Continues below advertisement

குடியிருப்பு வளாகம் - பாதை வசதிகள்

பொதுவாக அடுக்குமாடி திட்டங்களில் வீடு வாங்க வேண்டும் என்று இறங்குவோர், எந்த திட்டம் நமக்கு ஏற்றது என்பதை தெளிவாக தேர்வு செய்ய வேண்டும். குறிப்பாக நீங்கள் வீடு வாங்க நினைக்கும் அடுக்குமாடி குடியிருப்பு திட்ட வளாகத்தின் உட்புறத்தை மட்டும் பார்த்தால் போதாது. அந்த வளாகம் எந்த பகுதியில் அமைந்துள்ளது. அதன் அக்கம் பக்கத்து சூழல் என்ன என்பதையும் பொது மக்கள் தெளிவாக அறிய வேண்டும். பிரதான சாலையில் இருந்து அந்த வளாகத்துக்கு சென்று வருவதற்கான பாதை வசதி எந்த அளவில் அமைக்கப்பட்டுள்ளது என்று பாருங்கள்.

இடது - வலது பக்கம் காலி இடம்

பெரும்பாலான மக்கள் சம்பந்தப்பட்ட கட்டுமான திட்டத்துக்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று பார்க்கின்றனர். இதற்கான வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்வதுடன், அத்திட்டத்தில் பக்கவாட்டு காலியிடங்கள் விடப்பட்டுள்ளதா என்று பாருங்கள். பொதுவாக செட்பேக் எனப்படும் பக்கவாட்டு காலியிடங்கள் விடாமல் யாராவது அடுக்குமாடி கட்டடம் கட்டுவார்களா என்ற கேள்வி எழும்.

ஆனால், சில இடங்களில் வரைபடத்தில், ஐந்து அடி அகலத்துக்கு பக்கவாட்டு காலியிடம் காட்டப்பட்டு இருந்தாலும். அந்த அளவுக்கு இடம் விடாமல் கட்டடம் கட்டப்பட்டு இருக்கும். முறையாக தொழில் செய்ய வேண்டும் என்று நினைக்கும் பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள் இப்படி விதிகளை மீற வேண்டும் என்று நினைப்பதில்லை.

ஆனால், கட்டுமான பணிகளின் போது பணியாளர்களின் கவனக் குறைவால் பக்கவாட்டு காலியிடங்கள் குறைந்து விட வாய்ப்புள்ளது. குறிப்பாக, ஒரு கட்டடத்துக்கு முன்பக்கம், பின் பக்கம் ஆகியவற்றுக்கான காலியிடம் என்ன, இடது, வலது பக்கங்களுக்கான காலியிடங்கள் என்ன என்பதை வரைபடம் வாயிலாக துல்லியமாக அறிய வேண்டும்.

இதன்படி, நான்கு பக்கமும் இடம் விட்பட்டுள்ளதா என்பதை பார்க்க வேண்டும். இது பொது பயன்பாட்டுக்கான இடம் தான் என்றாலும், ஒவ்வொரு உரிமையாளரும் உண்மை நிலவரத்தை அறிய வேண்டியது அவசியம் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுநர்கள்.