தமிழ்நாட்டில் ஜுன் மாதம் பிறந்தது முதலே பல இடங்களில் மழை பரவலாக பெய்து வருகிறது. இந்த நிலையில், மாநிலத்தின் தலைநகரான சென்னையில் கடந்த சில நாட்களாகவே வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த ஓரிரு தினங்களாகவே மாலை வேளையில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
சென்னையில் கொட்டித் தீர்த்த மழை:
சென்னையில் இன்று மதியம் வரை வெயில் வாட்டி வதைத்த நிலையில், பிற்பகல் முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில், மாலை 4.45 மணிக்கு பிறகு சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது. இடி, மின்னலுடன் கனமழையாக மழை பெய்தது. ஆயிரம் விளக்கு, ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, கிண்டி, ஆலந்தூர், வடபழனி, விருகம்பாக்கம், வளசரவாக்கம், பாரிமுனை, திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அடையாறு என சென்னையின் பல பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது.
மக்கள் சிரமம்:
நேற்று பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்த நிலையில், இன்று திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்தது. இந்த மழை காரணமாக மாலையில் பணி முடிந்து வீடு திரும்புபவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி முடிந்து வீடு திரும்பும் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். மெட்ரோ பணி நடக்கும் இடங்களில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். சாலைகளின் சில இடங்களில் தண்ணீர் அதிகளவு பெருக்கெடுத்து ஓடியது.
மேலும், இரவு 7 மணி வரை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், தஞ்சை, சிவகங்கை, விருதுநகர் மற்றும் திருப்பூரில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.