வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வந்த நிலையில், இன்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. நண்பகல் நேரத்தில் வானம் சற்று மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை பெய்யவில்லை.






இந்த நிலையில், சென்னையில் தற்போது மழை பெய்து வருகிறது. அண்ணாசாலை, வடபழனி, நுங்கம்பாக்கம், கிண்டி, அமைந்தகரை, கோயம்பேடு, பாரிமுனை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால், பணி முடிந்து வீடு திரும்புவோர், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த மழை அடுத்த 3 மணி நேரத்திற்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


 








மேலும், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை அடுத்த 3 மணி நேரத்திற்கு பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இது மட்டுமின்றி, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை,  விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.