பருவ நிலை மாற்றம் - பரவும் சின்னம்மை

தமிழகத்தில் சின்னம்மை மற்றும் பொன்னுக்கு வீங்கி ஆகிய நோய்களால் பள்ளி மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குளிர் காலம் முடிந்து வெயில் காலம் துவங்கும் போது, பருவநிலை மாற்றம் காரணமாக சின்னம்மை, " மம்ப்ஸ் " எனப்படும் பொன்னுக்கு வீங்கி ஆகிய நோய்கள் ஏற்படுகின்றன.

Continues below advertisement

தமிழகத்தில் தற்போது பருவநிலை மாற்றம் அடைந்து வெப்பம் அதிகரித்து வருகிறது. இதனால், குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்கள் சின்னம்மை, பொன்னுக்கு வீங்கி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சின்னம்மை என்பது எளிதில் பரவும் வைரஸ் தொற்று நோய் , காய்ச்சல், உடல் சோர்வு, தளர்ச்சி, பசியின்மை ஆகிய அறிகுறிகளுடன் துவங்கி, உடலில் சிறிய கட்டிகளை உருவாக்கும்.

அதே போல் பொன்னுக்கு வீங்கியால் பாதிக்கப்பட்டோருக்கு கன்னத்துக்கு கீழே, கழுத்தின் ஒரு பக்கத்திலோ அல்லது இரு பக்கங்களிலோ வீக்கம் ஏற்படும். இது, ஓரிரு வாரங்களில் தானாகவே குணமாகி விடும்.

Continues below advertisement

இது குறித்து அரசு மருத்துவர்கள் கூறும் போது ; 

சின்னம்மையை பொறுத்தவரை கர்ப்பிணி, பச்சிளம் குழந்தை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தோருக்கு அதிக பாதிப்பு ஏற்படும். எனவே, இந்தப் பருவத்தில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

அதே போல், பொன்னுக்கு வீங்கி கணையத்தை தாக்கி அதீத வயிற்று வலி ஏற்படுத்தும். பெண் குழந்தைகளுக்கு சினைப்பையை தாக்கி அழற்சியை ஏற்படுத்தும். அடிவயிற்றில் கடும் வலி உண்டாகும்.

முகக் கவசம் அவசியம்

ஆண்களின் விந்தணு உற்பத்திக்கான விதைகளில் அழற்சியை ஏற்படுத்தி வலியை உண்டாக்கும். தண்டு வட நரம்பில் வைரஸ் தொற்று ஏற்பட்டால் மூளை வரை பரவும். இதனால், கழுத்தில் இறுக்கம், பிதற்றல் நிலை, கொடூரமான தலைவலி மற்றும் மயக்கம் ஏற்படும்.

இருமல், தும்மல், மூக்கொழுகுதல், சளி ஆகியவற்றால் இந்த தொற்று நோய் பரவும். எனவே, பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். குறைந்தது ஒரு வாரம் தனிமையில் இருப்பது நல்லது என இவ்வாறு மருத்துவர்கள் கூறினர்.