கடற்கரைகளுக்கு வர வேண்டாம் - காவல்துறை:
இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி டிசம்பர் 31ம் தேதி இரவு, 8 மணிக்கு மேல் கடற்கரைகளுக்கு செல்ல காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சென்னையில் உள்ள மெரினா, சாந்தோம், பெசன்ட் நகர் எலியட்ஸ், நீலாங்கரை மற்றும் பாலவாக்கம் கடற்கரைகளுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கடற்கரை மணற்பகுதிகள் மற்றும் கடற்கரை ஓரங்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். எனவே, 31ம் தேதியன்று இரவு 8 மணிக்கு மேல் கடற்கரை மணற்பகுதிக்கு பொதுமக்கள் வரவேண்டாம் என காவல்துறை தரப்பில் கோரப்பட்டுள்ளது.
பலத்த பாதுகாப்பு:
முன்னதாக, சென்னை வேப்பேரி பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பேசிய சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜீவால் ஐபிஎஸ், 2023 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு விழாவை முன்னிட்டு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை விதிக்கும் விதிமுறைகளை பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
“வரும் 31ஆம் தேதி 2023ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்து காவல்துறை ஏற்பாடுகள் செய்துள்ளன. மொத்தம் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர், 1500 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவர். மெரினா கடற்கரையில் கூடுதலாக கடற்கரை பாதுகாப்பிற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். அசம்பாவிதம் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என்றார்.
தீவிர கண்காணிப்பு:
முக்கிய சாலையான காமராஜ் சாலை வாலாஜா சாலை உள்ளிட்ட சாலைகளில் வாகனங்கள் பார்க் செய்ய அனுமதி இல்லை. நடமாடும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் அமைக்கப்படும். பைக் ரேசிங் கட்டுப்பாடுகள் அதிகமாகக் கண்காணிக்கப்படும். ஹோட்டல் விடுதியில் நடத்தப்படும் கொண்டாட்டத்தில் 18 வயது கீழே உள்ள நண்பர்களை அனுமதிக்கக் கூடாது. கொண்டாட்டத்திற்கு மாலை ஆறு மணி முதல் இரவு ஒரு மணி வரை அனுமதி அளித்துள்ளோம். எவ்விதமான போதைப்பொருட்கள் வைத்திருந்தாலும் அவர்களின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு:
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்புத் துறை சார்பாக தீயணைப்பு வாகனங்களை தயார் நிலையில் வைத்துள்ளோம். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை ஏற்படுத்தும் விதமாக தனியார் ஹோட்டல் விடுதிகளில் குடித்து விட்டு வாகனங்களை ஓட்ட வேண்டாம் என்று அறிவுறுத்துமாறு அவர்களிடம் கூறியுள்ளோம். குறிப்பாக பெண்களுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க உள்ளோம்.
க்யூ ஆர் கோட் என்னபடும் புதிய செய்முறையை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளோம். போதையில் இருக்கும் நபர்கள் அவர்கள் இடத்துக்கு போவதற்காக இதை பயன்படுத்திக் கொள்ளலாம். இன்று(29.12.2022) இரவு முழுவதும் அனைத்து வாகன சோதனைகளும் செய்யும் இடத்தில் அனைவருக்கும் இந்த க்யூ ஆர் பிரதி கொடுக்கப்படும். மேலும் அனைத்து தனியார் ஹோட்டல் விடுதிகளிலும் ஓட்டப்படும். விழிப்புணர்வுக்காக அனைத்து சமூக வலைத்தளங்களில் மற்றும் வானொலி ஆகியவற்றில் ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளோம். என, சங்கர் ஜீவால் தெரிவித்துள்ளார்.